திருச்சி:கோவில் திருவிழாவில், இரண்டு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், மூன்று பேர் காயமடைந்தனர். இரண்டு தரப்பிலும், 22 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே, வரதராஜபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவில், நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. அப்போது, எந்தந்த பகுதிகளுக்கு தேர் இழுத்துச் செல்வது என்பது தொடர்பாக, இரு வேறு சமூகத்தினர் இடையே பிரச்னை ஏற்பட்டது. அப்போது, ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதில், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த திவாகர், பிரகாஷ், முகேஷ் ஆகியோர் காயமடைந்து, தொட்டியம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இது குறித்த புகார்படி, தொட்டியம் போலீசார், ஒரு தரப்பை சேர்ந்த 13 பேர் மீதும், மற்றொரு தரப்பை சேர்ந்த ஒன்பது பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மோதல் நடந்த கிராமத்தில், பதட்டத்தை தணிக்க, 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.