கடலுார்:விபத்து வழக்கில் நீதிமன்றத்தை ஏமாற்றி ரூ.2.42 லட்சத்தை மோசடியாக எடுத்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கோர்ட் ஊழியரை தேடி வருகின்றனர்.
கடலுார் முதன்மை சார்பு நீதிபதி அன்வர் சதாத் மாவட்ட குற்றப்பிரிவில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது;
கடலுார் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வாகன விபத்து வழக்கில் மனுதாரர்களான லாவண்யா சரண்யா ஆகியோருக்கு வழங்க வேண்டிய இழப்பீடு தொகை 386106 ரூபாயை பாலுார் வங்கியில் வைப்பீடாக வைக்கப்பட்டது.
இதேபோன்று மற்றொரு விபத்து வழக்கில் மனுதாரர்களுக்கு சேர வேண்டிய இழப்பீடு தொகை 501482 ரூபாயை கடலுார் வங்கியில் வைப்பீடாக வைக்கப்பட்டது.
2012ல் லாவண்யா சரண்யா ஆகியோர் மேஜர் ஆன பின் வழக்கறிஞர் மூலம் இழப்பீடு தொகை கோரி மனு செய்தனர். வழக்கு எண் - 826/03க்கு பதிலாக வழக்கு எண் -1826/03ல் உள்ள அதிக தொகையான வட்டியுடன் 540540 ரூபாயை நீதிமன்றத்தை ஏமாற்றி பெற்றுள்ளனர்.
நீதிமன்றத்தில் உதவி சிரஸ்தாரராக பணிபுரிந்த குணாளன் இதை தெரிந்துகொண்டு நீதிமன்றத்தில் இருந்து 826/03 வழக்கு எண் வைப்பீடு ரசீதை திருடி மோடிசயில் ஈடுபட்டுள்ளார்.
அதாவது நீதிபதி வழங்கியதுபோல போலியான கடிதம் தயாரித்து கடலுார் வண்ணாரப்பாளையத்தை சேர்ந்த சிவதாஸ் உதவியோடு வங்கியில் கொடுத்து வண்டிப்பாளையத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரின் பெயருக்கு 242000 வரவோலை பெற்றுள்ளனர்.
அவரது பெயரில் மற்றொரு வங்கியில் உள்ள கணக்கில் பணத்தை எடுத்து மூன்று பேரும் நீதிமன்றத்தை ஏமாற்றி பயனடைந்துள்ளனர்.
இதேபோன்று வழக்கில் மீதி பணம் இருப்பதை தெரிந்து கொண்டு நீதிமன்றத்தை ஏமாற்றி அந்த பணத்தை பெறுவதற்கு வழக்கறிஞர் மீண்டும் லாவண்யா சரண்யா மூலம் இழப்பீடு தொகை கேட்டு மனு செய்துள்ளார்.
இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.
இது குறித்து கடலுார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து சத்தியமூர்த்தி சிவதாஸ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள குணாளனை தேடி வருகின்றனர்.