கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் தாய் மற்றும் இரு குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த வழக்கில் கைதான பெண் உட்பட மூவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், ஏமப்பேர் நரிமேடு காட்டுகொட்டாயை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி வளர்மதி, 35; இவர் மகன் தமிழரசன்,11; கேசவன் என்ற 10 மாத குழந்தையுடன் வசித்து வந்தார்.
கடந்த ஏப் மாதம் 17ம் தேதி, வளர்மதி மற்றும் அவரது இரு மகன்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். சொத்து தகராறில், உளுந்துார்பேட்டை செங்குறிச்சி பெரியார் நகரை சேர்ந்த அஞ்சலை (எ) விமலா கூலி ஆட்களை வைத்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, அஞ்சலை(எ) விமலா, 50; ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன் மகன் தமிழ்ச்செல்வன், 27; அவரது சகோதரர் பூபாலன், 30; சின்னப்பன் மகன் சிவா, 39; நாகப்பட்டினம் கடலங்குடியை சேர்ந்த நாகராஜன் மகன் ராமு,24; ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில், அஞ்சலை (எ) விமலா, தமிழ்ச்செல்வன், ராமு ஆகியோரின் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு, குண்டர் சட்டத்தில் கைது செய்ய, எஸ்.பி., மோகன்ராஜ் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவுபடி, மூவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சிறையில் உள்ள மூவருக்கும் அதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.