தூத்துக்குடி:''தி.மு.க.,வின் ஊழலுக்கு எதிராக பா.ஜ.,வின் நடைபயணம் ஜூலை 9ல் ராமேஸ்வரத்தில் துவங்குகிறது, ''என அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை கூறினார்.
இதுகுறித்து, பா.ஜ., தமிழக தலைவர் அண்ணாமலை கூறியதாவது:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தி.மு.க., ஒன்றிய செயலர்களின் கையில் உள்ளது.
மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் அதிகாரிகள் மத்தியில் கூறியதற்கு, தமிழக முதல்வர் இதுவரை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மேகதாது அணை கட்ட முயற்சித்தால் நாங்கள் அதை தடுத்து நிறுத்துவோம்.
தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலனுக்கான திட்டங்களை தி.மு.க., அரசு செயல்படுத்தவில்லை. மத்திய அரசு அளிக்கும் நிதியும் திரும்பச் செல்கிறது.
தென் தமிழகத்தை மையமாக வைத்து சிறப்பு முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த வேண்டும். துாத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது இந்தியாவுக்கு பெரிய பின்னடைவு என்பது பிற்காலத்தில் தெரியவரும். தாமிரத்துக்காக சீனா உள்ளிட்ட நாடுகளிடம் கைகட்டி நின்று கொண்டிருக்கிறோம்.
தி.மு.க., அரசின் ஊழலுக்கு எதிராக பா.ஜ., நடைப்பயணம் ஜூலை 9 ல் ராமேஸ்வரத்தில் துவங்குகிறது. அதற்கு முன்னதாக ஜூலை முதல் வாரத்தில் தி.மு.க. பைல்ஸ் எனும் தி.மு.க. ஊழலின் இரண்டாம் பாகத்தை வெளியிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.