வேலுார்:''இந்திய அளவில், கழிவுநீரில் இறங்கி மனிதர்கள் உயிரிழப்பது தமிழகத்தில்தான் அதிகமாக உள்ளது,'' என, தேசிய துாய்மைப் பணியாளர்கள் நல ஆணைய தலைவர் வெங்கடேசன் கூறினார்.
வேலுார் மாவட்டத்தில் துாய்மைப் பணியாளர்களுக்கு செயல்படுத்தப்படும் மறுவாழ்வு மற்றும் நலத் திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம், வேலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. தேசிய துாய்மைப் பணியாளர்கள் நல ஆணைய தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் துாய்மைப் பணியாளர் நல ஆணையம் அமைக்க, தமிழக கவர்னரிடம் மனு கொடுத்துள்ளோம்.
அதேபோல, துாய்மைப் பணியாளர் நலன்களை பாதுகாக்கவும், நலத்திட்ட உதவிகளை வழங்கவும், வளர்ச்சி நிதி ஆணையத்தை, தமிழக அரசு அமைக்க வேண்டும். வேலுார் மாநகராட்சி துாய்மைப் பணியாளர்களுக்கு, எட்டு மாதங்களாக வருங்கால வைப்பு நிதி செலுத்தப்படவில்லை.
இந்திய அளவில் கழிவு நீரில் இறங்கி மனிதர்கள் உயிரிழப்பது தமிழகத்தில் அதிகமாக இருக்கிறது. கடந்த 1993 முதல் தற்போது வரை, 225 துாய்மைப் பணியாளர்கள் கழிவு நீரில் உயிரிழந்துள்ளனர்.
மனிதர்கள் கழிவு நீரில் இறங்கக் கூடாது என்பதற்காக, 100 கோடி ரூபாய் செலவில் இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. விரைவில் அவை பயன்படுத்தப்படும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் கழிவுநீரில் இறங்குவதால் தான், 90 சதவீத உயிரிழப்பு ஏற்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.