சென்னை, ஜெர்மன் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி பிரெட்ரிச் வின்சென்ட், 23, என்பவர், மே 24ல் சென்னை வந்தார்.
வளசரவாக்கம் ஸ்ரீதேவிகுப்பம் சாலையில் நடந்து சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், கத்தி முனையில் இரண்டு பைகளை பறித்துச் சென்றதாக, வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார்.
விசாரணையில், ஜெர்மன் நாட்டு வாலிபர் பொய் புகார் அளித்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், நேற்று முன்தினம் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
ஜெர்மன் நாட்டு வாலிபருக்கு, ஒரு நாள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி, நேற்று முன் தினம் புழல் சிறையில், பிரெட்ரிச் வின்சென்ட் அடைக்கப்பட்டார். தண்டனை முடிந்து, நேற்று மதியம் சிறையில் இருந்து வெளியே வந்த அவரை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
அவருக்கு, நாடு திரும்ப மூன்று நாள் அவகாசம் அளித்து, நோட்டீஸ் வழங்கப்பட்டது. மூன்று நாட்களில் அவர் சொந்த நாடு திரும்பாவிட்டால், கைது செய்து நாடு கடத்தப்படுவார் என, போலீசார் தெரிவித்தனர்.