மாம்பலம், சென்னை, தி.நகர், உஸ்மான் சாலையில், ஜி.ஆர்.டி., நகைக்கடை செயல்படுகிறது. இக்கடையில், கடந்த 20 ஆண்டுகளாக, நந்தனம் மூன்றாவது குறுக்கு தெருவைச் சேர்ந்த பிரபீர் ஷேக், 38, என்ற நகை வடிவமைப்பாளர், ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வருகிறார்.
இவர், நகை செய்ய அளிக்கப்பட்ட தங்கத்தில், 2 கிலோ 46 கிராம் 100 மில்லி எடையுள்ள தங்க நகைகளை கையாடல் செய்ததாக, கடை மேலாளர் சத்தியநாராயணன், 48, நேற்று மாம்பலம் போலீசில் புகார் அளித்தார்.
இது குறித்து மாம்பலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். ஏற்கனவே, கடந்த மார்ச் மாதம், வாடிக்கையாளர்கள் சரி செய்ய கொடுத்த, 347 கிராம் தங்க நகைகளை அடகு வைத்து மோசடி செய்ததாக, இதே நகை கடை சார்பில், பிரபீர் ஷேக் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இதில், பிரபீர் ஷேக் மற்றும் இவரது நண்பரான வியாசர்பாடி எம்.கே.பி., நகரைச் சேர்ந்த பாலமுருகன் ஆகியோர், கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளிவந்தனர்.
தற்போது, மேலும் நகைகள் கையாடப்பட்டுள்ளதாக, நகைக்கடை நிர்வாகம் சார்பில் நேற்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.