கோட்டூர்புரம், சென்னை, கோட்டூர்புரம் நான்காவது பிரதான சாலை அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் மனோகர், 55; ஆழ்வார்பேட்டையில் அலுவலகம் வைத்து, பழைய கார் வாங்கி விற்கும் தொழில் செய்கிறார்.
இவருடன் மனைவி சாவித்திரி, சித்தி லீலா, 75, ஆகியோர் வசித்து வருகின்றனர்.
வைரக்கம்மல்
உடல்நலம் சரியில்லாத மாமியாரைப் பார்க்க, கடந்த மார்ச் 5ம் தேதி, மனைவியுடன் மனோகர் கேரள மாநிலம், பாலக்காடுக்குச் சென்றார். மூதாட்டி லீலா மட்டும், வீட்டில் இருந்தார்.
மார்ச் 16ம் தேதி தம்பதி சென்னை திரும்பினர். அப்போது, வீட்டின் படுக்கை அறையிலுள்ள பீரோவில் வைத்திருந்த ஒரு ஜோடி வைரக் கம்மல், மோதிரம் ஆகியவை காணாமல் போயிருந்தது.
இதுகுறித்து வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண் வரலட்சுமி, கார் ஓட்டுனர் பாலு ஆகியோரிடம் மனோகர் விசாரித்தார். இந்நிலையில், கடந்த ஏப்., 14ல், கேரளாவில் மாமியார் இறந்ததால், மீண்டும் தம்பதி கேரளா சென்றனர்.
கடந்த மே மாதம் மனோகர், சாவித்திரி மீண்டும் சென்னை திரும்பிய போது, அதே பீரோவில் இன்னும் சில வைர மோதிரம், மூக்குத்தி, தங்கத்தோடுகள் என, 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் திருடு போயிருந்தன.
சந்தேகம்
பணிப்பெண் வரலட்சுமி மீது சந்தேகம் வலுத்த நிலையில், யாரிடமும் சொல்லாமல் அவர் ஆந்திராவுக்கு சென்றுவிட்டார்.
இதுகுறித்த புகாரின்படி, கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிந்து, ஓட்டுனர் பாலுவிடம் விசாரிக்கின்றனர். வரலட்சுமியை பிடிக்க போலீசார் ஆந்திரா விரைந்துள்ளனர்.