பல்லடம்:பல்லடம் அருகே மின் கம்பத்தை சுற்றி நுாதன முறையில் கட்டப்பட்டு வரும் கழிப்பிடம் குறித்து, குடியிருப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சி, 4வது மண்டலம், 41வது வார்டுக்கு உட்பட்ட பெரியார் நகரில், 29 லட்சம் ரூபாய் செலவில், பொது கழிப்பிடம் கட்டப்பட்டு வருகிறது. கழிப்பிடத்தின் மத்தியில், உயர் அழுத்த மின்கம்பம் உள்ளது. மின் கம்பத்துடன் சேர்த்து கழிப்பிடம் கட்டப்பட்டு வருகிறது.
அப்பகுதியினர் கூறியதாவது:
குடியிருப்புகள் நிறைந்த இப்பகுதியில், கழிப்பிடம் கட்டுவதால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என, கட்டுமான பணி துவங்கும் முன் தெரிவித்திருந்தோம். இதன்படி, ஒதுக்குப்புறமான இடத்தில் கழிப்பிடம் கட்ட பூமி பூஜை போடப்பட்டது.
இதனால், பூமி பூஜை போட்ட இடத்தில் கழிப்பிடம் கட்டாமல், அவசரகதியில், மின் கம்பத்துடன் சேர்த்து, குடியிருப்புகளுக்கு அருகாமையில் கழிப்பிடம் கட்டி வருகிறது. ஒரு சில தனியார் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் அடிப்படையில், அவர்களுக்கு ஆதரவாக மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.
பொதுமக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், ஒரு சிலருக்கு ஆதரவாக மாநகராட்சி செயல்படுவது கவலை அளிக்கிறது.
இது தொடர்பாக, கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கழிப்பிடத்தை ஒதுக்குப்புறமான இடத்தில் அமைக்க மாநகராட்சி முன் வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.