மேட்டுப்பாளையம்:காரமடை அரங்கநாதர் கோவிலில் நம்மாழ்வார் ஜெயந்தி விழா நடந்தது.
பன்னிரு ஆழ்வார்களில் முக்கியமான நம்மாழ்வார் அவதரித்த தினமான வைகாசி விசாகம் நாளில், அனைத்து வைணவ திருத்தலங்களிலும் அவரது ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.
காரமடை அரங்கநாதர் கோவிலில் நம்மாழ்வார் ஜெயந்தி விழா நேற்று சிறப்பாக நடந்தது. அதிகாலையில் அரங்கநாதர் பெருமாள் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை, 8:30 மணிக்கு கால சந்தி பூஜையை தொடர்ந்து, நம்மாழ்வார் விக்ரகம், ராமானுஜர் சன்னதியில் எழுந்தருள செய்தனர். அங்கு விஷ்வக் சேனர் ஆராதனம், புண்யாவஜனம், கலச ஆவாஹனம், ஸ்தபன திருமஞ்சனம் செய்யப்பட்டன. பின், வெள்ளி சிம்மாசனத்தில் மேள வாத்தியங்கள முழங்க, நம்மாழ்வார் ரங்க மண்டபத்தில் அரங்கநாத பெருமாள் முன் எழுந்தருளினார். அரங்கநாதரிடம் இருந்து, பரிவட்டம், மாலை மரியாதை செய்யப்பட்டது.
கோவில் ஸ்தலத்தார்கள் வேதவியாசர் ஸ்ரீதர் பட்டர், திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஆகியோர் நம்மாழ்வார் இயற்றிய கோவில் திருவாய்மொழி என்னும் பிரபந்த பாசுரங்களை சேவித்தனர்.
தொடர்ந்து, சடாரி மரியாதையுடன் கோவிலில் வலம் வந்து ராமானுஜர் சன்னதியை நம்மாழ்வார் அடைந்தார். பின், உச்சக்கால பூஜை, சாற்று முறை அடுத்து மகா தீபாராதனையுடன் வைபவம் நிறைவடைந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.