தமிழக அரசு துவக்க பள்ளிகளில், புதிய பாடத்திட்ட முறையை நடைமுறைப்படுத்தி உள்ளது. கடந்தாண்டு 1 முதல் 3ம் வகுப்பு வரை, புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.
இதன்படி, துவக்க பள்ளி ஆசிரியர்களுக்கு, இது குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
கடந்த ஓராண்டாக புதிய பாடத்திட்டத்தின் வாயிலாக, 1 முதல், 3ம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கப்பட்டது.
தற்போது நான்கு, ஐந்து ஆகிய வகுப்புகளுக்கு, அரசு புதிய பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது. வரும் 7ம் தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் நான்கு, ஐந்து வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் தலைமை ஆசிரியர், ஆசிரியர், ஆசிரியைகளுக்கு, புதிய பாடத்திட்டம் குறித்த, 'எண்ணும், எழுத்தும்' பயிற்சி வகுப்பு, மேட்டுப்பாளையம், காரமடையில் நடக்கிறது.
மேட்டுப்பாளையம் வள்ளுவர் துவக்கப்பள்ளியில், பயிற்சி வகுப்பை, காரமடை வட்டார கல்வி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர்கள் ராஜேந்திரன், சிவசங்கரி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் மைதிலி, பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சாமுண்டீஸ்வரி ஆகியோர் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அளித்து வருகின்றனர்.
எளிய முறை பாடம்
இப்பயிற்சியில் காரமடை ஒன்றியத்தில் உள்ள, 123 பள்ளிகளில் இருந்து, 169 தலைமை ஆசிரியர், ஆசிரியைகள் பங்கேற்றனர். மூன்று நாட்கள் நடக்கும் இந்த பயிற்சியில், மாணவர்களுக்கு எளிய முறையில் எவ்வாறு பாடங்களை சொல்லிக் கொடுப்பது. மாணவர்களை செய்முறை கையேட்டில் (ஒர்க் புக்) எழுத வைப்பது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
காரமடை கன்னார்பாளையம் துவக்கப்பள்ளியில், இதே போன்று, ஆசிரியர், ஆசிரியைகளுக்கு பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
நான்கு, ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, பாடப்புத்தகங்கள், கையேடு நோட்டுகள் வந்துள்ளன. மூன்று நாட்கள் பயிற்சி முடிந்து செல்லும் ஆசிரியர்களுக்கு, பயிற்சி கையேடு, புத்தகங்கள் வழங்கப்படும். பள்ளி திறக்கும் நாள் அன்று, அனைத்து மாணவர்களுக்கும், புத்தகங்கள் பயிற்சி கையேடு நோட்டுகள் வழங்கப்படும்.- கிருஷ்ணமூர்த்தி, வட்டார கல்வி அலுவலர், காரமடை