கரூர்,-கரூர் பஸ் ஸ்டாண்ட் சுற்றி வைக்கப்பட்டுள்ள மெகா விளம்பர பலகைகளை, உயிர் பலி ஏற்படும் முன் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கரூர் சாலையோரங்கள் மற்றும் தனியார் கட்டடங்களில் வைக்கப்பட்டுள்ள மெகா விளம்பர பேனர்களால், பொது மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவானது. தமிழகத்தில் கடந்த காலங்களில், கட்சிக்காரர்கள் வைத்த பேனர் சரிந்து விழுந்த விபத்துகளில், அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்நிலையில், பொது மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாமல், விளம்பரப் பலகைகள் அமைக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் புதிய விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஆபத்தை விலைக்கு வாங்க அரசு விரும்புவது ஏன் என பலர் கேள்வி எழுப்பி வந்த நிலையில், நேற்று முன்தினம் கோவையில் விளம்பர பலகை சாலையோரம் நிறுவியபோது சாரம் சரிந்து, தொழிலாளர்கள் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். எனவே, கரூர் மாநகராட்சியில் பல இடங்களில் உள்ள விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும் என பலர் வலியுறுத்தி வருகின்றனர்.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: கரூர் பஸ் ஸ்டாண்ட், லைட் ஹவுஸ் கார்னர் உட்பட பல்வேறு இடங்களில் விதிகளை மீறி விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கரூர் பஸ் ஸ்டாண்ட் மனோகரா கார்னர், கோவை சாலையில், வணிக நிறுவனங்களில், இறுதி தளத்தில் மெகா சைஸ் விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, கரூர் பஸ் ஸ்டாண்ட் மனோகரா கார்னர் அருகில் வணிக வளாகத்தில் உள்ள மாடியில், 3க்கும் மேற்பட்ட மெகா விளம்பர பலகை வைத்துள்ளனர். இதற்கு கீழ், சிக்னல் இருப்பதால், வாகன ஓட்டிகள் நின்று செல்கின்றனர். பலத்த காற்று வீசினால், வாகன ஓட்டிகள் மீது விளம்பர பலகை விழும் அபாயம் உள்ளது. ஆபத்தான முறையில் வைக்கப்பட்டுள்ள மெகா விளம்பர பலகைகளை அகற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.