ஈரோடு,-ஈரோட்டில் ரவுடி கொலை வழக்கில், மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு, வீரப்பன்சத்திரத்தை சேர்ந்தவர் சந்தோஷ், 29; கனி ராவுத்தர் குளம், காந்தி நகர் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை பாரில் கடந்த, 30ல் மது குடித்தார். அதேசமயம் பி.பி.அக்ரஹாரம் ஜின்னா, 30; மற்றும் நான்கு பேர் மது குடித்தனர். பாரில் இருந்து வெளியே வந்தபோது, ஜின்னா உட்பட நான்கு பேரும் வழிமறித்து, முன்விரோதம் தொடர்பாக சந்தோஷிடம் வாக்குவாதம் செய்தனர்.ஆத்திரமடைந்த ஜின்னா உள்ளிட்டோர், கத்தியால் குத்தியதில், சம்பவ இடத்தில் சந்தோஷ் பலியானார். கொலையான சந்தோஷ் மீது, வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷன்களில் வழிப்பறி, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. அதேபோல் ஜின்னா மீதும் அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர். இதற்கிடையில் ஜின்னா, கருங்கல்பாளையம் மணிகண்டன், 27; நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்நிலையில் சின்னசேமூர் ரியாஸ் சித்திக், 34; பவானி, குருப்பநாயக்கன்பாளையம், ராணா நகர் மனோஜ்குமார், 37; எல்லப்பாளையம், சக்தி நகர், கனி ராவுத்தர்குளம் சதீஷ்குமார், 30; ஆகியோரை வீரப்பன்சத்திரம் போலீசார் நேற்று கைது செய்தனர்.நீதிமன்றத்தில் சரணடைந்த இருவரை, காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே, கொலைக்கான உண்மை காரணம் தெரிய வரும். இதனால் ஜின்னா, மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க, போலீசார் முடிவு செய்துள்ளனர்.