நாமக்கல்,;'மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தில், பயன்பெற, தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில், கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறையை போக்கவும், பசுந்தீவன உற்பத்தியை பெருக்கவும், தீவன அபிவிருத்தி திட்டத்தை, கால்நடை பராமரிப்புத்துறை செயல்படுத்தி வருகிறது. அதற்காக, நீர்ப்பாசன வசதி கொண்ட மரம், பழத்தோட்டத்தில், 0.5 ஏக்கர் முதல், 1.0 ஹெக்டேர் பரப்பளவில், பல்லாண்டு தீவன பயிர்களை ஊடுபயிராக பயிரிட்டு, அரசால் தெரிவிக்கப்படும் காலம் வரை பராமரிக்க, ஒரு ஏக்கருக்கு, 3,000 ரூபாய் மானியமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.நேர விரயத்தை குறைக்க, மின்சாரம் மூலம் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள், 50 சதவீதம் மானியத்தில், சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்க, 150 குறியீடு பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பெயன்பெற விரும்பும் விவசாயிகள், குறைந்தபட்சம், இரண்டு கால்நடைகள், 0.50 ஏக்கர் நிலப்பரப்பில் தீவனம் சாகுபடி செய்தல், மின்சார வசதி உடையவராக இருக்க வேண்டும்; கடந்த, 10 ஆண்டுகளில், அரசு திட்டங்களில் பயன்பெற்றவராக இருக்கக்கூடாது.சிறு குறு விவசாயிகள், பெண் விவசாயிகள் மற்றும் எஸ்.சி.,-எஸ்.டி., பயனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும், இத்திட்டத்திற்காக, தேர்வு செய்யும் பயனாளி, 50 சதவீதம் பங்குத்தொகை செலுத்த வேண்டும். தகுதி வாய்ந்த நபர்கள், வரும், 13க்குள், தங்கள் கிராமத்துக்குட்பட்ட கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி, திட்ட விளக்கங்களை பெற்று, உரிய படிவத்தில் விண்ணப்பிக்கலாம். கலெக்டரால் தேர்வு செய்யப்படும் பயனாளிகளின் பட்டியலே இறுதியானது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.