திருச்செங்கோடு,-திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேர்திருவிழாவில், அர்த்த நாரீஸ்வரர், செங்கோட்டுவேலவர் சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேர்திருவிழா, ஆண்டுதோறும் வைகாசி விசாக நட்சத்திரத்தில், 15 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும். கடந்த, 25ல், கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. 28ல், நான்காம் நாள் திருவிழாவையொட்டி, அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஆதிகேசவபெருமாளுக்கு கொடியேற்றம் நடந்தது. அன்று இரவு அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலவர், பரிவாரங்களுடன் பக்தர்களுக்கு எழுந்தருளினர்.நேற்று, கைலாசநாதர் ஆலயத்தில் சொக்கப்ப முதலியார் அரங்கத்தில், அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலவர் சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பின், திருத்தேரில் எழுந்தருளினர். காலையில், விநாயகர் திருத்தேரை, பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். மாலையில் செங்கோட்டுவேலர் திருத்தேரை இழுத்தனர். இன்று, அர்த்தநாரீஸ்வரர் திருத்தேரோட்டம் நடக்கிறது.