மதுரை: மதுரையில் ஆபத்தான விளம்பர பேனர்களை அகற்ற ஜூன் 7 க்குள் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கலெக்டர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.
கோவை கருமத்தம்பட்டியில் நேற்று முன்தினம் பேனர் அமைக்கும் பணியின்போது இரும்பு துாண்கள் விழுந்ததில் 3 தொழிலாளர்கள் இறந்தனர்.
இதையடுத்து பேனர்கள் குறித்து கணக்கெடுத்து அவற்றை சரிசெய்யும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் நேற்று கலெக்டர் சங்கீதா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் நேர்முக உதவியாளர் பார்த்திபன், ஆர்.டி.ஓ., பிர்தவுஸ்பாத்திமா, உதவி இயக்குனர் (பஞ்சாயத்து) அரவிந்தன், ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் இடையூறான விளம்பர பேனர்கள், அனுமதியில்லாதவை, ஆபத்தானவை குறித்து ஜூன் 7க்குள் கணக்கெடுக்க வேண்டும்.
அதன்பின் சம்பந்தப்பட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பி அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் பெரிய விளம்பர பேனர்களை அகற்றும் பணியின்போது அதற்கான உபகரணங்களை வழங்குவது, தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.