67 'சிம்' கார்டுகளை பயன்படுத்தியவர் கைது
மதுரை: உசிலம்பட்டி தாலுகா வ.கல்லுப்பட்டி அழகுராஜா 34. சிம் கார்டு விற்பனையாளர். இவரிடம் வாடிக்கையாளர்கள் கொடுத்த ஆதார் எண் நகலை பயன்படுத்தி அவர்களின் பெயரில் தனது போட்டோவை ஒட்டி 67 'சிம்' கார்டுகளை பயன்படுத்தி வந்தது தெரிந்தது. ஆள்மாறாட்டம் செய்தது, போலி ஆவணங்களை தொலை தொடர்பு நிறுவனத்திடம் தாக்கல் செய்ததற்காக அழகுராஜாவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
வேன் கவிழ்ந்து 10 பேர் காயம்
திருமங்கலம்: சேலம் மாவட்டம் நெத்திமேடு பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன் 65. குடும்பத்தினருடன் திருச்செந்துார் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தார். நேற்று அதிகாலை 4:45 மணிக்கு திருமங்கலம் மேலக்கோட்டை அருகே வேன் நான்கு வழிச்சாலை தடுப்புச்சுவரில் மோதியது. இதில் வாசுதேவன் மனைவி வளர்மதி, உறவினர்கள் ராஜ்குமார், ஷாலினி, விஜயகுமார், சரோஜா தேவி, குழந்தைகள் காதம்பரி, மித்ரன் உட்பட 10 பேர் காயமடைந்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
புகையிலை பொருட்களுடன் ஒருவர் கைது
திருமங்கலம்: பஸ் ஸ்டாண்டில் பாண்டியன் நகர் கிருஷ்ணனை 43, போலீசார் சோதனையிட்டு 5 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து கைது செய்தனர்.
தொழிலாளியின் விரல்கள் துண்டிப்பு
திருமங்கலம்: திண்டுக்கல் பாஸ்கரன் 23. கப்பலுார் ரப்பர் தொழிற்சாலை தொழிலாளி. நேற்று முன்தினம் வலது கை, இயந்திரத்தில் மாட்டிக் கொண்டதில் 4 விரல்கள் துண்டிக்கப்பட்டன. போலீசார் விசாரிக்கின்றனர்.
தற்கொலை
சோழவந்தான்: முள்ளிப்பள்ளம் பிச்சைப்பாண்டி மகன் நாகபாண்டி 21. நகரி தனியார் பிஸ்கட் கம்பெனி ஊழியர். அலைபேசியில் மூழ்கி இருந்தவரை பெற்றோர் கண்டித்தனர். இதனால் விரக்தி அடைந்து வீட்டில் துாக்கிட்டு இறந்தார். எஸ்.ஐ., குபேந்திரன் விசாரிக்கிறார்.
மாணவர் தற்கொலை
பேரையூர்: வெங்கடாசலபுரம் பாண்டி மகன் நந்தபலராமன் 14. டி. கல்லுப்பட்டி தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்தார். விடுமுறையில் வீட்டிலிருந்தார். நேற்று இவரது பெற்றோர் வேலைக்கு சென்றநிலையில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
போலீசை தாக்கிய ரவுடி
பேரையூர்: டி.கல்லுப்பட்டி ரவுடி சிவமணி 24. நேற்று முன்தினம் இரவு கல்லுப்பட்டி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தகராறில் ஈடுபட்டார். இரவு ரோந்து போலீஸ்காரர் பிரபாகர் எச்சரித்தபோது அவரை கட்டையால் தாக்கிவிட்டு தப்பினார். போலீசார் தேடி வருகின்றனர்.