கடலுார் : பாடலீஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் வைகாசி பெருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, நடந்து வருகிறது. தினமும் பல்வேறு அலங்காரங்களில் சாமி வீதியுலா நடந்து வருகிறது.
29ம் தேதி காலை அதிகார நந்தி கோபுர தரிசனம், அன்றயை தினம் இரவு தெருவடைச்சான் உற்சவம் நடந்தது. வைகாசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது.
அதையொட்டி, அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின், பெரியநாயகி உடனுறை பாடலீஸ்வரர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில், தேரில் எழுந்தருளினார். தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
காலை 8:15 மணிக்கு, பலத்த கரகோஷங்கள் முழுங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரடியில் இருந்து புறப்பட்ட தேர் சுப்புராய செட்டித் தெரு, சங்கரநாயுடு தெரு, சஞ்சிவி நாயுடு தெரு, போடி செட்டித் தெரு வழியாக நிலையை வந்தடைந்தது.
கடலுார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
தேரோட்டத்தையொட்டி, கடலுார் திருப்பாதிரிப்புலியூரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. டி.எஸ்.பி., பிரபு தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.