கடலுார்,: கடலுார் மாநகராட்சியில் உள்ள பூங்காக்கள் பராமரிப்பின்றி வீணாகியுள்ளதால், பொழுது போக்க இடமின்றி பொதுமக்களும், விளையாட இடமின்றி குழந்தைகளும் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடலுார் மாநகராட்சியில் பொதுமக்கள் குழந்தைகளுடன் பொழுது போக்கவும், பெரியவர்கள் நடை பயிற்சி மேற்கொள்ளவும், ஓய்வாக அமர்ந்து மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பதற்கு வசதியாக ஒவ்வொரு பகுதியிலும் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், சுப்ராயலு ரெட்டியார் பூங்கா மற்றும் வில்வநகர், வரதராஜன் பிள்ளை நகர், முதுநகர் உட்பட 13 இடங்களில் பெரிய அளவில் பூங்காக்கள் உள்ளது.
கடலுார் மாநகர மக்களுக்கு சில்வர் பீச் தவிர, பெரிய அளவில் பொழுது போக்கு அம்சங்கள் இல்லை. இந்நிலையில், அந்தந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்கள் பெரிதும் பயனுள்ளதாக இருந்து வந்தது. ஆனால் முறையான பராமரிப்பின்றி பெரும்பாலான பூங்காக்கள் பயன்பாடில்லாமல் உள்ளது.
கடலுார் நகரின் மைய பகுதியில் பாரதி சாலையில் விஸ்தாரமான பரப்பளவில் சுப்ராயலு ரெட்டியார் பூங்கா உள்ளது. இங்கு நடை பாதை, சிறுவர்கள் விளையாட விதவிதமான விளையாட்டு சாதனங்கள், நீர் வீழ்ச்சி, பிரகாசமூட்டும் விளக்குகள் என, அனைத்து வசதிகளும் செய்யப்பட்டது. மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இப்பூங்கா உள்ளது.
கோடை விடுமுறையையொட்டி, இங்கு, தினமும் அதிக அளவில் பொதுமக்கள் குடும்பத்துடனும், குழந்தைகளுடன் வந்து மகிழ்ச்சியாக பொழுதை கழித்துவிட்டு செல்கின்றனர். பராமரிப்புக்கென நுழைவு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. ஆனால், முறையாக பராமரிக்கப்படாமல், பூங்கா முழுமையாக சேதமாகியுள்ளது. நடைபாதை சிலாப்புகள் உடைந்து சேதமாகியுள்ளது. சிறுவர் விளையாட்டு உபகரங்கள் அத்தனையும் வீணாகி, பூங்கா ஒப்புக்கென உள்ளது.
இதனால், அங்கு வரும் சிறுவர், சிறுமியர் உடைந்த விளையாட்டு உபகரணங்களில் விளையாட முடியாமல் தவிக்கின்றனர். புல்தரைகள் காய்ந்து மைதானம் போல் காட்சியளிக்கிறது.
விளக்கு வெளிச்சமும் போதுமான அளவில் இல்லை. செடி கொடிகள் முளைத்து புதர் போல் காட்சி அளிப்பதால் குழந்தைகளை அழைத்து வருவதற்கு பொதுமக்கள் தயங்குகின்றனர்.
இதனால் பொதுமக்கள் வருகை முற்றிலும் குறைந்துவிட்ட நிலையில், காதலர்கள் பூங்காவாக மாறியுள்ளது. காலை முதல் மாலை வரையில் காதலர்கள் பூங்காவை ஆக்கிரமித்து கொள்கின்றனர்.
இவர்கள், பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில், நடந்து கொள்கின்றனர்.
இதே போல், கடலுார் மாநகராட்சியில் உள்ள பெரும்பலான பூங்காக்கள் சேதமடைந்து காணப்படுகின்றன.
எனவே, கடலுார் மாநகராட்சியில் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக இருந்துவரும் சுப்ராயலு ரெட்டியார் பூங்கா உள்ளிட்ட சேதமடைந்துள்ள பூக்காக்களை முழுமையாக சீரமைத்து, மீண்டும் புதுப்பொலிவு பெற செய்வதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.