மதுரை: பணம் பறிப்பு வழக்கில் இன்ஸ்பெக்டர் வசந்தியுடன் சேர்ந்து சாட்சிகளை மிரட்டிய விவகாரத்தில் 2 பேரின் முன்ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அர்ஷத். பேக் தயாரிக்கும் தொழில் செய்கிறார். வியாபாரத்திற்கு பொருட்கள் வாங்க 2021 ஜூலை 5 ல் மதுரை வந்தார். ஒருவரிடம் கடன் வாங்க நாகமலை புதுக்கோட்டை சென்றார்.
அப்போது நாகமலை புதுக்கோட்டை இன்ஸ்பெக்டராக இருந்த வசந்தி போலீசார் அல்லாத சிலருடன் வந்து, சந்தேகப்பட்டு விசாரிப்பதுபோல் ரூ.10 லட்சத்தை வழிப்பறி செய்தார். அர்ஷத் பலமுறை கேட்டும் பணத்தை தர மறுத்த வசந்தி மிரட்டினார். அப்போதைய எஸ்.பி., பாஸ்கரனிடம் அர்ஷத் புகார் செய்தார்.
வசந்தி, உக்கரபாண்டியன் உட்பட சிலர் பணம் பறித்ததாக மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்தனர். வசந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 2021 ஆகஸ்டில் கைதானார். உயர்நீதிமன்றக் கிளை ஜாமின் அனுமதித்தது.
சாட்சிகளை மிரட்டியதாக மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் பதிந்த வழக்கில் மார்ச் 31 ல் வசந்தி மீண்டும் கைதானார். அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். வசந்திக்கு உயர்நீதிமன்றம் மே 5 ல் ஜாமின் அனுமதித்தது. இவ்வழக்கில் மதுரை சிலைமான் உக்கரபாண்டியன், தேனி குண்டுபாண்டி முன்ஜாமின் மனு தாக்கல் செய்தனர்.
நீதிபதி ஜி.கே.இளந்திரையன்: மனுதாரர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது. சாட்சிகளை மிரட்டியதற்கு ஆதாரம் உள்ளதாக அரசு தரப்பு கூறுகிறது. குற்றச்சாட்டின் தீவிரம் கருதி முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டார்.