மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டு பலமாதங்களாகியும் பணிகள் துவங்குவது தாமதமாகிறது.
மதுரை விமான நிலையம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. 500 ஏக்கருக்கும் மேல் உள்ள இந்த நிலையத்தை காலத்தேவைக்கேற்ப விரிவுபடுத்துவது இன்றியமையாதது. சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டிய கட்டத்தில், பெரிய விமானங்கள் வந்து இறங்கும் வகையில் ரன்வேயின் நீளத்தை அதிகரிப்பது தேவையாகிறது. இதையடுத்து தமிழக அரசு சொந்த செலவில் ரூ.200 கோடி ஒதுக்கி 633 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது.
சின்ன உடைப்பு, பாப்பனோடை, ராமன்குளம், பெருங்குடி, அயன்பாப்பாக்குடி, குசவன்குண்டு கிராமங்களைச் சேர்ந்த நிலத்தை விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைத்து ஓராண்டுக்கும் மேலாகிறது. இந்நிலையில் புதிய டெர்மினல் அமைக்கும் பணியும், ரூ.35 கோடிக்கு 15 கி.மீ.,க்கு சுற்றுச்சுவர் கட்டும் பணியும் துவங்கியது.
ஆனால் ரன்வேயின் நீளத்தை அதிகரிக்கும் பணிமட்டும் தாமதமாகியது. ரன்வேயின் நீளத்தை அதிகரித்தால் தற்போதுள்ள மதுரை - கப்பலுார் ரிங்ரோடு துண்டிக்கப்படும் நிலை ஏற்படும். இதனால் இந்த ரோட்டை 'அண்டர்பாஸ்' ஆக அமைக்கலாமா என ஆலோசித்தனர். அதற்கு ரூ.500 கோடிக்கும் மேல் ஆகும் என்று மதிப்பீடு செய்ததால், அந்த யோசனை கைவிடப்பட்டது.
அதற்கு பதிலாக தனியார் மருத்துவ கல்லுாரி அருகே துவங்கி அருப்புக்கோட்டை ரோட்டில் வலையங்குளம் வரை 15 கி.மீ.,க்கு ரிங்ரோடு மாற்றி அமைக்கப்பட உள்ளது. இந்த ரோடு அமைவதிலும் சிக்கல் உள்ளதாக கூறப்படுகிறது.தாமதமாகிறது. ஏனெனில், கையகப்படுத்திய பகுதியில் அயன்பாப்பாக்குடியில் 43 ஏக்கர் குளம், குசவன்குண்டு கிராமத்தில் 34 ஏக்கர் குளம் உள்ளது.
இந்த நீராதாரங்களுக்கு சேதாரமின்றி கட்டுமானங்களை அமைக்க வேண்டும் என்பதால் ரன்வேயை எவ்வாறு அமைப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. அயன்பாப்பாக்குடியின் 43 ஏக்கர் குளம் மட்டுமின்றி, அதற்கான பாசனபரப்பு முழுவதும் கையகப்படுத்தப்பட்டுள்ளதால் பிரச்னை இல்லை.
அதேசமயம் குசவன் குண்டு கிராமத்தில் கையகப்படுத்திய 34 ஏக்கர் போக மீதி 40 ஏக்கர் அளவுக்கு குளம் உள்ளது. இங்கு வயல்வெளி பகுதி முழுவதும் கையகப்படுத்தப்படவில்லை என்பதால் அவற்றுக்கு நீர்நிலை தேவை உள்ளது.
எனவே இப்பிரச்னையில் நீராதாரத்தின் தன்மையை மாற்றாமல் எப்படி பிரச்னைக்கு தீர்வு காண்பது என தலைமைச் செயலர் அளவில் மாதந்தோறும் காணொலி காட்சியில் அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர். என்றாலும் தீர்வு கிடைத்தபாடில்லை. இதனால் நிலம் கையகப்படுத்தி ஒப்படைத்த பின்னும், ரன்வே பணிகள் தாமதமாகிறது.