சென்னை: ரயில் விபத்து நடந்த ஒடிசா மாநிலத்திற்கு, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையிலான குழுவை தமிழக அரசு அனுப்பி உள்ளது.
அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு, முதல்வர் ஸ்டாலின் பேசினார். ரயில் விபத்து குறித்து விசாரித்து, ஆழ்ந்த வருத்தத்தையும், உயிரிழந்தவர்களுக்கு இரங்கலையும் தெரிவித்தார். காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யவும், தேவைப்பட்டால் மருத்துவ குழு மற்றும் இதர உதவிகளை அனுப்பி வைப்பதாகவும் முதல்வர் தெரிவித்தார்.
மேலும், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணீந்திரரெட்டி, குமார்ஜெயந்த், அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் உள்ள குழு, ஒடிசா மாநிலத்திற்கு செல்லவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது பற்றி அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், ''இன்று காலை குழுவினருடன் ஒடிசா செல்கிறோம்,'' என்றார்.
உதவி எண்கள் அறிவிப்பு
விபத்தில் காயமடைந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் விபரங்களை அறியவும், தேவையான உதவிகளை வழங்கவும், கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. கட்டுப்பாட்டு அறையை, 94458 69843 என்ற மொபைல் போன் எண்; 94458 69848 என்ற வாட்ஸாப் எண்; 044 - 2859 3990 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.