திருப்பூர்: காலாவதியான, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, 'பெல்' நிறுவனத்திடம் ஒப்படைக்க, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
நகர்ப்புற(மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி) உள்ளாட்சித் தேர்தலின்போது பயன்படுத்தப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், அந்தந்த உள்ளாட்சிகள் வசம் உள்ளன.
'ஸ்ட்ராங் ரூம்'களில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள இந்த 'எம் 2' ரக இயந்திரங்கள், 2008ம் ஆண்டுக்கு முன் உருவாக்கப்பட்டவை. இவற்றை அழிப்பதற்காக, 'பெல்' நிறுவனத்திடம் ஒப்படைக்க, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறுகையில், 'ஓட்டுப்பதிவு இயந்திரம் தயாரிக்கப்பட்ட தேதியில் இருந்து, 15 ஆண்டுகள் மட்டுமே பயன்படுத்த முடியும். தமிழகத்தில், 35 மாவட்டங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள, ஒரு லட்சத்து, ஒரு ஆயிரத்து, 331 இயந்திரங்கள் பயன்படுத்த தகுதியற்றவை.
இவற்றை மாவட்ட தேர்தல் அலுவலர் மூலம், பெங்களூரு 'பெல்' நிறுவனத்திடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒதுக்கப்பட்ட தேதிகளில், மாவட்டங்களில் இருக்கும் இயந்திரங்கள் பெங்களூரு எடுத்துச்செல்லும் பணி துவங்கியுள்ளது,' என்றனர்.