திருப்பூர்: தகுதிச்சான்றிதழ் பெறாத பள்ளி பஸ்களை, பள்ளி திறக்கும் நாளில் பறிமுதல் செய்து, அபராதம் விதிக்க வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி திறப்புக்கு முன், பள்ளி பஸ்கள் தகுதிச்சான்றிதழ் பெற வேண்டும் என்று, மே மாத துவக்கத்தில், போக்குவரத்து துறை அறிவுறுத்தியது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு, மூன்று கட்டங்களாக, பள்ளி பஸ்கள் ஆய்வு நடந்தது. இருப்பினும், பல பஸ்கள், தகுதிச்சான்றிதழ் பெறாமல் உள்ளன; குறைபாடுகள் கண்டறியப்பட்டவை, திருப்பி அனுப்பப்பட்டும் வருகின்றன.
இன்றும் (3ம் தேதி), 5ம் தேதியும் இறுதிக்கட்ட ஆய்வு, தகுதிச்சான்றிதழ் வழங்கும் பணி நடக்கிறது. தணிக்கைக்கு வராத பஸ்களை, வரும் 7ம் தேதி பள்ளி திறப்பின் போது, கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், 'மாணவ, மாணவியர் பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியம் கூடாது. தகுதிச்சான்றிதழ் பெறாமல் இயங்கி, பள்ளி பஸ்கள் விபத்துகளை ஏற்படுத்தினால், ஒட்டுமொத்த அரசுக்கும் அவப்பெயர்; தகுதிச்சான்றிதழ் பெறாமல் இயக்கப்பட்டால், பள்ளி திறக்கும் நாளில் பஸ்களை பறிமுதல் செய்து, பள்ளி நிர்வாகங்களுக்கு அபராதம் விதிக்க வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,' என்றனர்.