கரூர்:கரூரில், தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின், தம்பி அசோக்குமாருக்கு தொடர்புடையவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர்.
இந்நிலையில், இரண்டாம் கட்டமாக, விரைவில் புதிதாக பல இடங்களில் சோதனை நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கரூரில் முதல் கட்ட சோதனை மட்டுமே நிறைவு பெற்றுள்ளது. அதில், ஓராண்டில் மட்டும் வாங்கி குவிக்கப்பட்ட ஏராளமான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆனால், புதிதாக வாங்கிய சொத்து ஆவணங்களுக்கு, முறையான கணக்கு இல்லை.
மேலும், 26 முதல் நேற்று முன்தினம் வரை சோதனை நடந்த இடங்களில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் புதிதாக, 18 பேர் கொண்ட பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
அந்த இடங்களில் சோதனை செய்ய முறையான, சட்டரீதியான அனுமதி பெற்று மீண்டும், கரூரில் சோதனை நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.