ஓசூர்:ஓசூரில், பூங்கா பெயர் பலகையில் எழுதியிருந்த கருணாநிதி பெயரை, பா.ஜ.,வினர் சிலர் கறுப்பு வண்ணம் பூசி அழித்தனர். அதை கண்டித்து, தி.மு.க.,வினர் தர்ணாவில் ஈடுபட்டதால், மூவர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காமராஜ் காலனியில் விளையாட்டு மைதானத்திற்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் வைக்க, மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கருணாநிதி பெயர் எழுதிய பெயர்பலகை வைத்து, நேற்று திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மைதானத்திற்கு, ராம்பிரகாஷ் - விஜயலட்சுமி தம்பதி இடம் வழங்கியதாகவும், எந்த ஒரு சம்பந்தமும் இல்லாத கருணாநிதி பெயரை வைத்து, திறப்பு விழா நடத்தும் தி.மு.க.,விற்கு, பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்தது.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் நாகராஜ் தலைமையில், மைதானம் முன் நேற்று காலை அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, பெயர் பலகையில் இருந்த கருணாநிதி பெயரை, கறுப்பு வண்ணம் பூசி அழித்தனர்.
போலீசார் அவர்களை எச்சரித்த நிலையில், பா.ஜ.,வினர் ஒன்று சேர்ந்ததால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின், பா.ஜ.,வினர், ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி கலைந்தனர்.
பா.ஜ.,வினரை கைது செய்ய வலியறுத்தி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலர் பிரகாஷ் எம்.எல்.ஏ., மேயர் சத்யா உள்ளிட்ட நிர்வாகிகள், மைதானம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, ஓசூர் தெற்கு மண்டல பா.ஜ., தலைவர் நாகு, நகர பொதுச்செயலர் வெங்கடேஷ் உட்பட மூவரை, ஓசூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.