பாப்பிரெட்டிப்பட்டி,:தோழிகளுடன் குளிக்க சென்ற பள்ளி மாணவி, ஏரியில் மூழ்கி இறந்தார்.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மெணசியைச் சேர்ந்தவர் தீர்த்தகிரி, 41; நுாலக ஊழியர்.
இவரது மனைவி சங்கீதா, 40. இவர்களுக்கு குழந்தை இல்லாததால், சங்கீதா சகோதரரின் பெண் குழந்தை திவ்யதர்ஷினியை தத்தெடுத்து வளர்த்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி தனியார் பள்ளியில், திவ்யதர்ஷினி ஏழாம் வகுப்பு படித்தார். விடுமுறைக்கு தன் தோழிகள் காவியா, 11, மைதிலி 13, நித்யஸ்ரீ, 10, ஆகியோருடன் புளியங்குட்டை ஏரியில் நேற்று காலை, குளிக்க சென்றார்.
அப்போது மீன் பிடிக்கும் ஆர்வத்தில், தடுமாறி ஆழமான பகுதியில் விழுந்து, நீரில் மூழ்கி இறந்தார். பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.