திருச்சி:திருச்சி அருகே தண்டவாளத்தில் லாரி டயர் வைத்த இடத்தை, மாவட்ட எஸ்.பி., சுஜித்குமார் நேற்று நேரில் பார்வையிட்டு, விசாரணை நடத்தினார்.
குமரியில் இருந்து சென்னைக்கு, கடந்த 1ம் தேதி கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது.
திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து, நள்ளிரவு, 12:00 மணிக்கு சென்னை புறப்பட்ட இந்த ரயில், லால்குடி அருகே, மேல வாளாடி மேம்பாலம் பகுதியில் ரயில் சென்ற போது, தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த டயர் மீது ரயில் இன்ஜின் முன் பக்கம் மோதியது.
இதனால், ரயிலின் முதல் நான்கு பெட்டிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சுதாரித்த இன்ஜின் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தி, தண்டவாளத்தில் பார்த்த போது, இரண்டு லாரி டயர்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக, திருச்சி ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒரு மணி நேரத்தில், ரயிலில் மின் இணைப்பு சரி செய்யப்பட்டு, இரவு 1:45 மணிக்கு ரயில் சென்னை புறப்பட்டுச் சென்றது.
இச்சம்பவம் பற்றி அறிந்த விருத்தாச்சலம் ரயில்வே டி.எஸ்.பி., பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரித்தனர்.
மே 31ம் தேதி, லால்குடி அருகே, மேலவாளாடி ரயில்வே தண்டவாளம், பாலத்தின் கீழ், சாலை பணிக்காக ஜே.சி.பி., மூலம் குழி தோண்டி உள்ளனர்.
அப்போது, நிலத்தில் பதித்திருந்த ரயில்வே டிராக் சிக்னல் கேபிள் பழுதடைந்ததால், சிக்னல் வேலை செய்யவில்லை.
ரயில்வே போலீசார் விசாரித்து, ஜே.சி.பி., டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனால், மேலவாளாடியைச் சேர்ந்த சிலர், ரயில்வே போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களுக்கு இச்சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என, ரயில்வே போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில், நேற்று திருச்சி மாவட்ட எஸ்.பி., சுஜித்குமார், மேல வாளாடி பாலம் பகுதியில், லாரி டயர்கள் வைக்கப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு, விசாரணை நடத்தினார்.
தென் மாவட்டங்களுக்கான பெரும்பாலான விரைவு ரயில்கள் செல்லும் வழித்தடத்தில், விபத்தை ஏற்படுத்தும் நோக்கில், லாரி டயர்கள் வைத்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், என கோரிக்கை எழுந்துள்ளது.