விருதுநகர்:மின்வாரியத்தில் உதவிபொறியாளர் பணி வாங்கி தருவதாக, 14 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஐந்து பேர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் மாதாங்கோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக்குமார், 28; பி.டெக்., பட்டதாரி. இவருக்கு, சிவகாசி சித்துராஜபுரத்தைச் சேர்ந்த பிரபுகண்ணன், 2019ல் அறிமுகமானார்.
இவர், நண்பர் அய்யப்பன் மூலம் அரசு பள்ளியில் உதவியாளர் பணிக்கு பணம் கட்டி சேர்ந்ததாக கூறினார்.
தற்போது சென்னையில் வசிக்கும் அய்யப்பன், அவரது மகன் விஷ்ணு, மருமகன் அருண்குமாருக்கு அரசு துறை உயர் அதிகாரிகளிடம் நல்ல பழக்கம் உள்ளதாகவும், அவர்கள் மூலம் பல நபர்களுக்கு வேலை வாங்கிக் கொடுத்துள்ளதாகவும் கூறினார்.
நம்பிய கார்த்திக்குமார், தனக்கும் அரசு வேலை வாங்கித் தரும்படி கூறினார்.
சிவகாசி சித்துராஜபுரத்தில் உள்ள அய்யப்பனின் வீட்டுக்கு வரச்சொல்லி, 20 லட்சம் ரூபாய் தந்தால் மின்வாரியத்தில் உதவி பொறியாளர் பணி வாங்கித் தருவதாக விஷ்ணு, அருண்குமார் கூறினர்.
ஒப்புக் கொண்ட கார்த்திக், சென்னை சென்று தேர்வு எழுதினார். 'பணி நியமன ஆணை தயாராக உள்ளது. வங்கி கணக்கில் பணம் செலுத்தி அதை பெற்றுக் கொள்ளலாம்' என, பிரபுகண்ணன் கூறியதையடுத்து, கார்த்திக்குமார் 14 லட்சம் ரூபாயை அனுப்பினார்.
ஆனால், வேலை வாங்கித் தராமல் மோசடி செய்தனர். இது குறித்த புகாரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், பிரபுகண்ணன், அய்யப்பன், அவரது மனைவி மாலா, மகன் விஷ்ணு, மருமகன் அருண்குமார் ஆகிய ஐந்து பேர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.