குளித்தலை,:கொத்தனாரை மர்மநபர்கள் வெட்டிக் கொலை செய்தது தொடர்பாக, மூவரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த கல்லடையைச் சேர்ந்தவர் மோகன்ராஜ், 27; கொத்தனார். இவரது மனைவி கோமதி, 25. இவர்களுக்கு, 7, 5 வயதில் மகன், மகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு, 2:00 மணிக்கு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த மோகன்ராஜ், மொபைல் போனில் யாரிடமோ பேசியதும், வெளியே சென்றார்.
அவரது மனைவி கேட்டபோது, 'நண்பரின் பைக் பெட்ரோல் இல்லாமல் நின்றுவிட்டது; பங்கிற்கு சென்று பெட்ரோல் வாங்கி கொடுத்துவிட்டு வருகிறேன்' என, தெரிவித்துள்ளார்.
பின், திருச்சி - தோகைமலை நெடுஞ்சாலை, கல்லடை வளைவு சாலையோரம், வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக, தோகைமலை போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது.
விசாரணையில், அது மோகன்ராஜ் என, தெரியவந்தது.
மோகன்ராஜ் நண்பர்களான, திருச்சி மாவட்டம், தாயனுார் கீரிக்கல்மேட்டைச் சேர்ந்த கனகராஜ், அதே ஊரைச் சேர்ந்த கலையரசன், கரூர் மாவட்டம், நச்சலுாரைச் சேர்ந்த ஜீவா ஆகியோரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.