முதுகுளத்துார்:முதுகுளத்துார்--பரமக்குடி சாலை தீயணைப்பு நிலையம் அருகே பஸ் நிற்காத இடத்தில் புதிய பயணியர் நிழற்குடை கட்டும் பணி நடக்கிறது. இதனால் எந்த பயனும் இல்லை. அரசு நிதி வீணடிக்கப்படுவதாக அப்பகுதி கவுன்சிலர் பார்வதி புகார் தெரிவித்தார்.
ராமநாதபுரம் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.7 லட்சத்தில் இங்கு புதிய பயணியர் நிழற்குடை கட்டும் பணிக்கு மே 17ல் பூமி பூஜை செய்யப்பட்டு தற்போது பயணியர் நிழற்குடை கட்டும்பணி நடக்கிறது. இப்பகுதியில் இதுவரை இவ்வழியே செல்லும் எந்த பஸ்சும் நிற்பதில்லை.
இதனால் பஸ் நிறுத்தப்படாத இடத்தில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டும் பணி நடக்கிறது. இதுகுறித்து 2வது வார்டு கவுன்சிலர் பார்வதி கூறுகையில், இந்த இடத்தில் எந்த பஸ்சும் நிற்பதில்லை. எனவே இங்கு பயணியர் நிழற்குடை கட்டுவதால் எந்த பயனும்இல்லை. அரசு நிதி வீணடிக்கப்படுகிறது.
இவ்வழியே உயர் அழுத்த மின்கம்பி செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு 2வது வார்டில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். வர்டுக்கு உட்பட்ட பகுதியில் நடைபெறும் திட்டப்பணிகள் குறித்து கவுன்சிலர்களுக்கு தெரிவிப்பது இல்லை. இதுகுறித்து கவுன்சில் கூட்டத்தில் புகார் தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளேன்.
எனவே கலெக்டர் விஷ்ணு சந்திரன் அதிகாரிமீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.