இடம்: திருப்பூர், மத்திய பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயில்.
மகாராஜா போல வேடமணிந்த ஒருவர், 'நான் தான் போதை ராஜா; இன்று இந்த உலகில் என்னை தெரியாத மனிதர் யாருமே இருக்க மாட்டார்கள். அனைவர் மனதிலும் என்னோட சம்ராஜ்ஜியம் தான் கொடிகட்டி பறக்குது. நான் தான் கொஞ்சம் கொஞ்சமாக மனிதனை கொல்லக்கூடிய இனிமையான விஷம்.
இந்த முட்டாள் மனிதர்கள் என்னை உபயோகப்படுத்தி விட்டு, அவர்களோட மரணத்தை அவர்களே தேடிக் கொள்கிறார்கள். நான் தான் பூலோக சொர்க்கத்தையே, சுடுகாடாக மாற்றி கொண்டிருக்கிறேன்.
மருத்துவமனையில் என்னால் பாதிக்கப்பட்டவர்கள் தான் நிரம்பி வழிகின்றனர். மனிதர்களை நான் மிருகமாக மாற்றிக் கொண்டிருகின்றேன். மனித சமுதாயத்தையே மரண பயத்தில் ஆட்டி படைத்துக் கொண்டிருக்கிறேன்,' என்று கொக்கரித்துக்கொண்டிருந்தார்.
குறுக்கிட்ட பெண் ஒருவர், ''பலவீன மனிதனை வேண்டுமானால், நீ உன் வசப்படுத்தி வைத்திருக்கலாம். அனைவரும் உன்னை தேட மாட்டார்கள். உனது கடைசி காலம் நெருங்கி விட்டது. உன்னோட காலம் எல்லாம் இதோடு முடிய போகிறது'' என எதிர்க் குரல் கொடுக்கிறார்.
அவருக்கு பதிலளித்த போதை ராஜா, 'பெண்ணே... உனக்கு மனிதர்களை பற்றி என்ன தெரியும்? இந்த மனிதர்கள் அவர்களை விட என்னை (போதை) அதிகமாக நேசிக்கின்றனர். பான்பராக், பீடி, சிகரெட் இல்லையென்றால், அவர்களுக்கு நிம்மதியே இருக்காது. கஞ்சா, மது, போதை ஊசி எல்லாம் தான் கலந்தது தான் அவர்களது வாழ்வே,' என்கிறார்.
அப்பெண், ''ஒவ்வொருவருக்கும் தேவையான விழிப்புணர்வும், ஆலோசனைகளை தொடர்ந்து நாங்கள் (தன்னார்வ அமைப்புகள்) வழங்க துவங்கியுள்ளோம். அரசும் நோயில்லாத தமிழகத்துக்கு வழிகாட்டுகிறது. என்றாவது ஒருநாள் மாற்றம் வரும். அது மனிதனுக்கு ஏற்றமாக மாறும். மனிதனே.. தேவையற்ற பழக்கத்துக்கு அடிமையாகி, மந்தையாட்டு கூட்டம் போல் மதிகேட்டு நடக்காதே, மருந்தே மதுவென்று மறுவாழ்வை உனக்கே நீயே கொடுக்காதே.. இதுவரை போனது போகட்டும்; இனியாவது, போதையை நிறுத்திக் கொண்டு, பாதையை மாற்றிக் கொண்டால், மனிதனாக, நல்ல பாதையில் வலம் வரலாம். உங்கள் வாழ்வு வசந்தம் வீசும்,' என்கிறார்.
திருப்பூர், பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில், உலக புகையிலை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சி நடந்தது. அதில், நடந்த கலந்துரையாடல் தான் இவை.முன்னதாக, சிகரெட், போதை ஊசி, புகையிலை, மதுபாட்டில் போன்ற உடைகளுடன் வேடமிட்டு, கலைஞர்கள் நாடகம் நடித்துக் காண்பித்து, பார்வையாளர்களை அசத்தினர்.