திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கடந்த வாரம் திறக்கப்பட்டது. ஐந்து தளங்கள், 600 அறைகளுடன் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் மருத்துவமனை முகப்பில், தரைத்தள நுழைவு வாயில் அருகே, இந்திய மருத்துவத்துறையின் சிறப்புகளை விளக்கும் கலைநயம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதில், முந்தைய காலத்தில், மேற்கொள்ளப்பட்ட பாரம்பரிய மருத்துவ முறைகள், ரிஷிகளின் மருத்துவம், தலைவலி, உடல்வலிகளுக்கு ஆயுர்வேத எண்ணெய் சட்டி மூலம் செய்த வைத்திய முறை, தற்போதைய நவீன யுகத்தில் உருவான சிகிச்சை முறைகள், டாக்டரை சந்தித்து ஆலோசனை, சிகிச்சை பெறுவது, ஆய்வகங்களில் பரிசோதனை மேற்கொள்வது, அறுவை சிகிச்சை கூடங்களின் செயல்பாடுகள் தத்ரூபமாக 'பிளாஸ்டர் ஆப் பாரீஸ்' வாயிலாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதம், அலோபதி மூன்றும், இ.சி.ஐ., ஆய்வக பரிசோதனைகளும் இடம் பெற்றுள்ளது. இந்திய மருத்துவ முறைகளின் பன்முகங்களை, வெளிப்படுத்தும் விதமாக, இதனை பொதுப்பணித்துறை ஏற்பாடு செய்துள்ளது.