'அப்பா தந்தார் ஆரஞ்சு அம்மா தந்தார் ஆப்பிள்
அண்ணன் தந்தான் அன்னாசி
அக்காள் தந்தாள் வாழைப்பழம்
தாத்தா தந்தார் திராட்சை
பாட்டி தந்தார் பலாப்பழம்
அத்தை தந்தார் மாதுளை
மாமா தந்தார் மாம்பழம்''
குழந்தைகளுக்கான பாடல் என்றாலும், பழங்கள், சத்தான வளங்கள் என்பதைச் சுட்டிக்காட்டுவதாக இது அமைந்துள்ளது. பழ மரங்கள் வளர்ப்பு என்பது திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை குறைவுதான்.
கிராமங்களில் பழ மரக்கன்று வளர்க்கும் திட்டத்தில் இணைந்து பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:
திருப்பூர் மாவட்டத்தில், தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறை வாயிலாக அனைத்து வட்டாரங்களிலும், அரசின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மற்றும் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டங்களின் கீழ், பழ மரக்கன்று தொகுப்பு வழங்கப்படுகிறது.
இருநுாறு ரூபாய் மதிப்புள்ள பழ மரக்கன்று தொகுப்பு, பயனாளிகளுக்கு, 50 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. மா, கொய்யா, எலுமிச்சை, நெல்லி, மாதுளை என, 5 வகையான பழ மரக்கன்றுகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது.
மாவட்டத்தில், 2023 - 24ம் ஆண்டில், இத்திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்பட்டுள்ள, 52 கிராமங்களுக்கு மட்டும், 15 ஆயிரத்து 600 பழ மரக்கன்று தொகுப்பு வழங்க, 23.40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ், அனைத்து கிராமங்களுக்கும் பழ மரக்கன்று வழங்க, 13.75 லட்சம் ரூபாய் நிதி பெறப்பட்டுள்ளது.
திட்டத்தின் கீழ் பயன் பெற, விவசாயிகள், தங்கள் விவரங்களை, www.tnhorticulture.tn.gov.in/kitஎன்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் அதில் தெரிவித்துள்ளார்.