'கால்நடை வளர்ப்பு குறைந்ததால், தொழு உரங்களின் பயன்பாடும் குறைந்து, மண்ணில் நுண்ணுாட்டம் குறைந்திருக்கிறது' என, வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளது. அவிநாசி, ஊத்துக்குளி, திருப்பூர் வட்டாரங்களில் நிலக்கடலை சாகுபடி மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில், 22 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது; அவிநாசி வட்டாரத்தில் மட்டும், 10 ஆயிரம் ஏக்கரில் சாகுபடியாகிறது.
நிலக்கடலை சாகுபடியில் மேற்கொள்ள வேண்டிய பயிர்சாகுபடி முறை குறித்து, வட்டார அளவில் வேளாண் துறையினர் சார்பில், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் சார்பில், விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மாவட்ட ஆலோசகர் அரசப்பன் கூறியதாவது:நிலக்கடலை விளைச்சலை அதிகப்படுத்த 'கதிரி லெபாக்ஸி 1812' என்ற புதிய ரகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாகுபடி பணி துவங்கும் முன், கோடை உழவு செய்வதன் வாயிலாக மண் வளம் அதிகரிக்கும்; அடுத்த பருவத்திற்கு வரும் புழுக்கள் கட்டுப்படுத்தப்படும்; நீர் ஆதாரம் மேம்படும். நிலக்கடலை விதையை டி.விரிடி பூஞ்சாணம் கலந்து விதைப்பதன் வாயிலாக அழுகல் நோய் கட்டுப்படுத்தப்படுகிறது. காற்றில் உள்ள தழைச்சத்தை நிலை நிறுத்தக் கூடிய உயிர் உரங்களை பயன்படுத்துவதன் வாயிலாக மண் வளம் மேம்படும்.கால்நடைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால், தொழு உர பயன்பாடும் குறைந்துவிட்டது. எனவே, இரண்டு வண்டி தொழு உரத்துடன், சூப்பர், பொட்டாஷ் கலந்து, மூட்டம் போட்டு வைத்திருந்து, விதைப்பின் போது, யூரியா கலந்து இடுவதன் வாயிலாக, நிலக்கடலையில் அதிக மகசூல் பெற முடியும். தொழு உரங்கள் இடுவது குறைந்துவிட்டதால், மண்ணில் நுண்ணுாட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது. செயற்கை முறையில், வேளாண் துறை சார்பில் நுண்ணுாட்டச்சத்து தயாரிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
'கதிரி லெபாக்ஸி 1812' புதிய ரகம் அறிமுகம்கோடை உழவால் மண் வளம் சிறக்கும்டி.விரிடி பூஞ்சாணம் கலந்து விதைக்கணும்மண்ணில் நுண்ணாட்டச்சத்து அதிகரிக்கணும்