இயற்கையோடு இணைந்து வாழ்வது தான், ஆயுட்காலத்தை நீட்டிக்க செய்யும் ரகசியம். ஆனாலும், வெயில் காலம் என்பதை, 'போதாத காலம்' என் கண்ணோட்டத்துடன் கடந்து செல்வர் பலர்.
'எப்போது தான் வெயில் குறையுமோ...' என்ற புலம்பலுடன், வியர்வை துளிகளுடனே நாட்களை நகர்த்தும் நிலை, நிச்சயம் சலிப்பை தரும் தான். ஆனால், 'வெயில் நல்லது' என்பது, மருத்துவ உண்மை.
உழைப்பாளிகளுக்கு வெயில் 'சுடாது'
இந்த ஆச்சர்ய தகவல் குறித்து, மருத்துவர்கள் சொல்லியதை பார்க்கலாமா...
சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி, உடலுக்கு உகந்தது. கோடையில் மூட்டுவலி, வாதம், சளித்தொந்தரவு போன்றவற்றின் பாதிப்பு குறைவாக இருக்கும்.
இக்கால கட்டத்தில் புழுக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், இருமுறை குளிப்பதை வழக்கமாக கொண்டிருப்போம்.
தாகம் அதிகரிக்கும் என்பதால், வழக்கத்தை விட இரு மடங்கு, தண்ணீர் குடிப்போம். தயிர், மோர், பழைய சாதம் என, உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளை அதிகம் உட்கொள்வோம்.
அறையில் அடைந்து கிடப்பதை விட, திறந்தவெளியில் கொஞ்சமாய் வரும் காற்றின் சுகத்தை அனுபவிக்க மனம் விரும்பும். நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உடல் உழைப்பை வழங்கும் தொழிலாளர்களுக்கு, கோடை வெயில் அதிகமாய் சுடாது; வெயில் அதிகம் என்பதற்காக, அவர்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கப் போவதில்லை.
சுமை துாக்கும் தொழிலாளர்கள், தலைச்சுமையாய் தெரு, தெருவாய் சென்று காய்கறி விற்கும் வியாபாரிகள் ஆகியோரும், வெயிலின் உஷ்ணம் உணர்ந்தபடி தான் தங்கள் பணியை தொடர்கின்றனர்.
இயற்கையின் நியதியில், கோடை, ஒரு வசந்த காலமும் கூட தான்.
இவ்வாறு, கூறுகின்றனர் மருத்துவர்கள்.
வெயிலிலும்பச்சைப்பசேல்
''கோடைக்காலம், வெயிலால் மனிதர்களை துவண்டு போகச் செய்தாலும், தாவர, மர இனங்களை பூக்கச் செய்யும் காலமும் இதுதான்.
இக்கால கட்டத்தில் தான், கோடை வாஸ்தலங்களில், கோடை விழா என்ற பெயரில் மலர்க்கண்காட்சி போன்ற பலவகை, இயற்கையை கொண்டாடும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.வேப்ப மரம், புங்கை மரம் உள்ளிட்ட பல்வேறு மர இனங்களின் இலைகள், பச்சை பசேல் என இருக்கும்'' என்கிறார் தமிழ்நாடு அறிவியல் இயக்க கருத்தாளர் ராஜூ.
திருச்சி உறையூரில், எவ்வித மேற்கூரை மண்டபமும் இல்லாமல் வெற்ற வெளியில் வீற்றிருக்கிறாள் 'வெக்காளி அம்மன்'; வெயிலுக்கு உகந்த அம்மன் என்ற பெயரிலும் விருதுநகரில் ஒரு அம்மன் கோவில் உள்ளது. இதனாலேயே, அந்த ஊரில் வெயிலாத்தா, வெயிலான் என்ற பெயர்கள் சகஜம்.
ஆக, இயற்கையோடும், அறிவியலோடும், ஆன்மிகத்தோடும் இணைந்தது தான், கோடை என்கிற பருவகால மாற்றமும். வெயிலோடு விளையாடி... வெயிலோடு உறவாடும் மனப்பக்குவம் வந்து விட்டால், கோடையும் சுடாது.
'கோடைக்காலம், வெயிலால் மனிதர்களை துவண்டு போகச் செய்தாலும், தாவர, மர இனங்களை பூக்கச் செய்யும் காலமும் இதுதான். வேப்ப மரம், புங்கை மரம் உள்ளிட்ட பல்வேறு மரங்களில் இலைகள், பச்சை பசேல் என இருக்கும்.