பெண்ணாடம்-பெண்ணாடத்தில் கழிவு நீர் கால்வாய் துார் வாரும் போது, துப்புரவு பணியாளர் இறந்தது குறித்து தேசிய துாய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் விசாரணை நடத்தினார்.
கடலுார் மாவட்டம், பெண்ணாடம் சோழன் நகர், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாபு, 40; பெண்ணாடம் பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக வேலை செய்தார்.
கடந்த மாதம் 19ம் தேதி, பாபு மற்றும் சிலர் சிலுப்பனுார் சாலை பகுதியில் கழிவுநீர் கால்வாய் அடைப்பை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பாபுவிற்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி 24ம் தேதி இறந்தார்.
பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இந்நிலையில், போதிய பாதுகாப்பு சாதனங்கள் இல்லாமல், கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தியதாக, தேசிய துாய்மை பணியாளர்கள் ஆணையத்திற்கு புகார் சென்றது.
அதன்பேரில், தேசிய துாய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் நேற்று பாபு இறப்பு குறித்து விசாரணை நடத்தினார். பாபுவுடன் பணியில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள், மேற்பார்வையாளர், பேரூராட்சி செயல் அலுவலர், முதலுதவி அளித்த பெண்ணாடம் தனியார் மருத்துவமனை டாக்டர், பாபுவின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார்.
பின்னர் அவர் கூறியதாவது;
கழிவுநீர் வாய்க்காலில் மனிதர்கள் இறங்கி வேலை பார்க்கக் கூடாது. பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பாபு பணியில் ஈடுபட்டுள்ளார். யார் அவரை வேலை செய்ய சொன்னார்களோ அவர்கள் மீது வழக்குப் பதியப்படும். பிரேத பரிசோதனை முடிவு வந்தால் தான் உரிய நடவடிக்கை எடுக்க முடியும்.
வேலையின் போது ஏற்பட்ட பாதிப்பால் தான் பாபு இறந்தார் என தெரியவந்தால், பணியில் ஈடுபடுத்தியவர்கள் மீது, கையால் துப்புரவாளர்கள் பணி செய்வதை தடை செய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டம் - 2013ன் படி, (எம்.எஸ்., ஆக்ட்) உரிய இழப்பீடு பெற்று தருவோம். இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
சுய உதவிக்குழு மூலம் பணிபுரிபவர்களுக்கு கால்வாய் சுத்தம் செய்யும் பணி வழங்கக்கூடாது. அவ்வாறு வற்புறுத்தினால் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கடலுார் கலெக்டர் அருண் தம்புராஜ், எஸ்.பி., ராஜாராம் உட்பட பலர் உடனிருந்தனர்.