பெண்ணாடம்-பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில், நள்ளிரவில் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து காணிக்கையை திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலுார் மாவட்டம், பெண்ணாடத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் புனரமைக்கும் பணி, நடந்து வருகிறது.
வழக்கம் போல், நேற்று முன்தினம் இரவு 8:30 மணியளவில் நடை மூடப்பட்டு, கோவில் பணியாளர்கள் வீட்டிற்கு சென்றனர். கோவில் புனரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் முன் மண்டபம் அருகே உள்ள குடியிருப்பில் தங்கி உள்ளனர். அவர்களில் சிலர் மாடியில் துாங்கினர்.
நள்ளிரவு 1:00 மணியளவில் மர்ம நபர் இருவர் அம்மன் கோவில் முன் மண்டபம் பகுதியில் உள்ள 20 அடி உயரம் கொண்ட மதில் சுவரில் நடந்து சென்றனர். இதை பார்த்த தொழிலாளிகள் கோவில் பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
கோவில் பணியாளர்கள் வந்து பார்த்தபோது பிரளயகாலேஸ்வரர், அம்மன் சன்னதியில் இருந்த உண்டியலின் ஒரு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
மற்றொரு பூட்டை உடைக்க முடியாததால் காணிக்கை திருடு போகவில்லை. பின்னர் கோவிலுக்குள் பதுங்கி இருந்த 2 மர்ம நபர்களை போலீசார் உதவியுடன் பணியாளர்கள் துரத்தி பிடிக்க முயன்றனர். ஆனால் இருவரும் தப்பிச் சென்றனர்.
தடய அறிவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலுக்குள் வெளி பகுதியில் இருந்து உள்ளே ஏறி வர முடியுமே தவிர, உள்ளே இருந்து வெளியே செல்வது சிரமம்.ஆனால் மர்ம நபர்கள் மட்டும் எப்படி சென்றனர் என தெரியவில்லை. ஒருவேளை நந்தவனம் பகுதியில் இரவு முழுவதும் பதுங்கி இருந்து அதிகாலை கோவில் திறந்தபின் வெளியே சென்றிருக்கலாம்.