விழுப்புரம்- திண்டிவனம் அருகே கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஈச்சேரியை சேர்ந்தவர் பச்சையப்பன் மகன் அருள், 34; ரவுடியான இவர், அப்பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தார்.
ஒலக்கூரை சேர்ந்த பிரேம்குமார், 23; நொளம்பூர் கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
கடந்த மாதம் 10ம் தேதி பிரேம்குமார், மனைவியுடன் கோவில் திருவிழாவிற்காக, நொளம்பூர் வந்தபோது, அருள் மற்றும் அவரது நண்பர் ஸ்ரீகாந்த் ஆகியோர் பிரேம்குமாரை சரமாரியாக கத்தியால் வெட்டினர்.
இது குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்தனர். அருளின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் பொருட்டு, எஸ்.பி., சசாங் சாய் பரிந்துரையின் பேரில், குண்டர் சட்டத்தின் கீழ் அருளை கைது செய்ய, கலெக்டர் பழனி உத்தரவிட்டார்.
இதையடுத்து, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அருள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.