விழுப்புரம்-விழுப்புரம் அருகே மழை வேண்டி, கிடா வெட்டி படையலிடும் நுாதன வழிபாடு நடந்தது.
விழுப்புரம் மாவட்டம், சிறுவந்தாடு அடுத்த எஸ்.மேட்டுப்பாளையம் கிராமத்தில், ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில், கனகதண்டி மகா மாரியம்மனுக்கு 10 நாள் திருவிழா நடைபெறும்.
இந்த ஆண்டு திருவிழா 25ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலையில், அம்மனுக்கு அபிஷேக, ஆராதனையும், இரவில் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் வீதியுலாவும் நடந்து வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக, மழை வேண்டி கிடா வெட்டி படையலிடும் வழிபாடு நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு நடந்தது.
அதனையொட்டி, கோவில் வாயிலில் பாட்டுப்பாடி, உடுக்கை அடித்து, ஆட்டுக்கிடாவை உறங்க வைத்தனர். அந்த கிடா உறங்கிய பின், பலியிடப்பட்டது.
பின், கிடாவை வெட்டி, குடலை எடுத்து, விரதமிருந்த நபர்கள் மாலையாக கழுத்தில் அணிந்து கொண்டு, ஊர் எல்லைகளை வலம் வந்தனர். பின், குடலை புதைத்து வழிபாடு நடந்தது.
இந்நிகழ்விற்கு மறு நாள் மழை பெய்யும், ஆட்டு ரத்தம் கலந்த உணவு சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், இந்த வினோத வழிபாடு நடந்தது.
விழாவில், பரசுரெட்டிப்பாளையம், கொங்கம்பட்டு, குமாரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.