சேத்தியாதோப்பு-கடலுார் மாவட்டத்தில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வு துணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
கடலுார் - விழுப்புரம் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சீனிவாசன், காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை, குமராட்சி, கீரப்பாளையம், புவனகிரி மற்றும் குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்கள், விதை சுத்தகரிப்பு நிலையங்களில் ஆய்வு செய்தார்.
அங்கு, இருப்பில் உள்ள குறுவை பட்ட நெல் ரகங்கள், மானாவாரி பட்டத்திற்கான வீரிய ஒட்டு கம்பு ரகங்களின் தரத்தை அறிய கொள்முதல் ஆவணங்கள், பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
மானாவாரி கம்பு விதைப்பு செய்யும் போது, கோடை உழவு செய்த பின்பு மக்கிய தொழு உரம் 4 டன் ஏக்கருக்கு தெளிப்பு செய்த பின், நன்கு உழவு செய்ய வேண்டும். பின், 3 கிலோ விதைக்கம்பை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து நல்ல ஈரப்பதத்தில் கம்பு விதைப்பு செய்யுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்.
உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே ரசீதுடன் விதைகளை வாங்க வேண்டுமென, கேட்டுக் கொண்டார்.
விதைச் சட்டத்தை பின்பற்றி விதை விற்பனை செய்யாத விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்தார்.கடலுார் விதை ஆய்வாளர் தமிழ்வேல் உடனிருந்தார்.