கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2023-24ம் ஆண்டில் ரூ. 6,722.22 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, வங்கியாளர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் அனைத்து வங்கியாளர்கள் கூட்டமைப்பு கூட்டம் நேற்று நடந்தது.
கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் கவுரி சங்கர்ராவ், மகளிர் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், மாவட்ட தொழில் மைய திட்ட அலுவலர் கலைச்செல்வி, தாட்கோ மேலாளர் அனந்தமோகன், நபார்டு வங்கி மேலாளர் பாலகிருஷ்ணன், வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலர் தினகர் ராஜ்குமார் உட்பட அனைத்து மாவட்ட வங்கி பொது மேலாளர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2023-24ம் ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், இந்த ஆண்டு ரூ.6,722. 27 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் விவசாய கடன் ரூ.5,962.66 கோடி. நடுத்தர சிறு, குறு தொழில் கடன் ரூ.641.17 கோடி. இதர முன்னுரிமை கடன்கள் ரூ.118.44 கோடி என, தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, வங்கியாளர்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மாவட்ட தொழில் மையம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், தாட்கோ திட்டங்கள் மற்றும் மகளிர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கடன் விண்ணப்பங்கள் தொடர்பாக வங்கி வாரியாக மதிப்பாய்வு செய்யப்பட்டது.
கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், மத்திய, மாநில அரசின் திட்டங்களுக்கு வங்கியாளர்கள் முன்னுரிமை கொடுத்து, அனைத்து விண்ணப்பங்களுக்கும் 15 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களின் கணக்குகளை புதிப்பித்து, ஊதியத்தை உடனடியாக வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும்.
இப்பணியை மேற்கொள்ள வங்கி கணக்குடன், ஆதார் எண் இணைக்கும் பணியை ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுடன் இணைந்து சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என, அறிவுறுத்தினார்.