கோவை: பல்கலைகள் தன்னாட்சி அதிகாரம் படைத்தவை, துணைவேந்தர்கள் சட்டரீதியாக நியமிக்கப்படுபவர்கள்; மாநில தலைமை செயலர்களுக்கு இணையான நிலையில் இருப்பவர்கள். ஆனால், கீழ்நிலை அரசு அலுவலர்களை போல் அமைச்சர்கள் சிலரால் நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது என்றும், முதல்வர் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வலியுறுத்தியுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, பல்கலை சிண்டிகேட், செனட் கூட்ட முடிவுகள், துணைவேந்தர் செயல்பாடுகள், பல்கலை நிர்வாக முடிவுகளில் அமைச்சர்கள் தலையீடு அதிகரிப்பதாக, பல்வேறு தரப்பில் புகார்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
கண்டிக்கத்தக்கது
இதுகுறித்து, கல்வியாளர் பாலகுருசாமி கூறியதாவது:
உயர்கல்வித்துறையின் மேலிடத்தில் உள்ள அரசியல் தலைவர்களின் செயல்பாடுகள், மிகவும் கண்டிக்கத்தக்கவை.
பல்கலையின் விதிமுறைகள், நடைமுறைகள், கல்வியாளர்களை உரிய முறையில் மதிப்பதில்லை. துணைவேந்தர்கள் கீழ்நிலை அரசு அலுவலர்களை போல் நடத்தப்படுகின்றனர்.
பல்கலைகள் தன்னாட்சி அதிகாரம் படைத்தவை என்பதையும், அரசின் துறைகள் அல்ல என்பதையும், சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
துணைவேந்தர்களின் செயல்பாடுகளும், முடிவுகளும் சிண்டிகேட், செனட் போன்ற கல்வி அமைப்புகளின் ஆய்வுக்கு மட்டுமே உட்பட்டவை. கல்வி அமைச்சர் மற்றும் அவரது செயலர் ஆகியோருக்குக் கட்டுப்பட்டவை அல்ல.
பல்கலையின் சிண்டிகேட் ஒப்புதல் அளிக்கும், எந்த தீர்மானம் குறித்தும், நீதிமன்றத்தை அணுக இயலுமே தவிர, அமைச்சர்கள் கேள்வி எழுப்ப இயலாது.
பல்கலையின் அடிப்படை செயல்பாடுகளுக்கு கூட, அமைச்சர்கள் உத்தரவிடுவது துரதிஷ்டவசமானது. இது பல்கலை தன்னாட்சி அதிகாரத்துக்கும், துணைவேந்தர், சிண்டிகேட், செனட் குழுக்களின் அதிகாரங்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.
துணைவேந்தர் பங்கேற்ற ஒரு கூட்டத்தில், யு.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.இ., இதர தேசிய அளவிலான கல்வி அமைப்புகளின் உத்தரவுகளை செயல்படுத்தவேண்டாம் என, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் ஆணையிடுகிறார்; இது முற்றிலும் அபத்தமானதும், தேவையற்றதாகும்.
அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும், தேசிய ஒழுங்குமுறை ஆணையகங்களின் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டவை. சிண்டிகேட் ஒப்புதல் அளிக்கும் முடிவுகளை, துணைவேந்தர்கள் செயல்படுத்தவேண்டாம் என உத்தரவிடப்படுகிறது.
சிண்டிகேட் அமைப்புகளில், அரசுத் துறைச் செயலர்கள் பலர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்பதையும், சிண்டிகேட் எடுக்கும் முடிவுகளில் அவர்களுக்கும் பங்கு இருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
பொறுப்பில் உள்ள அரசியல்வாதிகள், தங்கள் உத்தரவைப் பின்பற்றாமல் இருக்கும் சில துணைவேந்தர்களை, தொலைபேசியில் அழைத்து கடுமையாக வசைபாடுவதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இது மிகவும் வருந்தத்தக்க கீழ்த்தரமான செயல்.
துணைவேந்தர் அலுவலகத்தில், அமைச்சர் படங்கள் வைக்க வேண்டும் என்ற உத்தரவிட்டு இருப்பது, அதிர்ச்சியானது மட்டுமின்றி அவலமானதும் கூட.
தற்போது உயர்கல்வித்துறைக்கு, நேர்மை நிறைந்த, உறுதியான, அர்ப்பணிப்பு கொண்ட நபர் தலைமை வகிக்க வேண்டும். அப்போதுதான், தமிழகம் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
அடிப்பவர்களை அனுசரிக்கணுமாம்!