கோவை: சிகரெட் கழிவுகளை மறுசுழற்சி செய்து, பொம்மைகள், தலையணை, மெத்தைகள் செய்யும் திட்டம், கோவையில் நாளை துவங்குகிறது.
நாட்டில் ஆண்டுதோறும், 10 ஆயிரம் கோடி சிகரெட் துண்டுகள் கழிவுகளாக வீசி எறியப்படுகின்றன. அவை சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் ஏராளம்.
உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுப்படி, புகையிலை பொருட்களின் கழிவுகளில் 7 ஆயிரம் நச்சு ரசாயனங்கள் உள்ளன.
சிகரெட் பில்டர் தயாரிக்க பயன்படும், செல்லுலோஸ் அசிடேட் என்ற மட்காத பிளாஸ்டிக் பொருள், நிலம், நீரை கடுமையாக மாசுபடுத்துகிறது. இத்தகைய நச்சுத்தன்மை கொண்ட சிகரெட் கழிவுகளை மறுசுழற்சி செய்து, பொம்மைகள், தலையணை, மெத்தைகள், உரம், பாய் உள்ளிட்ட பொருட்களை தயார் செய்ய முடியும்.
இதற்கான முயற்சியை, தென்மாநிலங்களில் முதல் முறையாக, கோவையில் டாக்டர் கலாம் பவுண்டேஷன் தொண்டு நிறுவனத்தினர் துவங்கவுள்ளனர்.
நாளை மாலை கோவை வாலாங்குளம் பாலம் கீழ் பகுதியில் நடக்கும் நிகழ்ச்சியில், கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் முன்னிலையில், இதற்கான பணிகள் துவங்கப்பட உள்ளன.