பள்ளிபாளையம்: களியனுார் பகுதியில் விதிமீறி செயல்பட்ட, 2 சாய ஆலைகளுக்கு, 'சீல்' வைக்கப்பட்டது.
பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் ஏராளமான சாய ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலானவை விதிமுறையை மீறி செயல்பட்டு வருகின்றன. சுத்திகரிப்பு செய்யாமல் நேரடியாக சாயக்கழிவுநீர் வெளியேற்றுவதால், காவிரியாற்றில் கலந்து தண்ணீர் மாசடைந்து வருகிறது. இந்த தண்ணீரை பயன்படுத்தும் மக்களுக்கு, பல்வேறு உடல்சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன. மீன் வளமும் பாதிக்கப்படுகிறது.
கடந்த பல ஆண்டாக, குமாரபாளையம் மாசுக்கட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகள், ஆய்வு செய்து விதிமுறை மீறி செயல்பட்டு வரும் சாய ஆலைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனாலும், சாய ஆலைகள் தொடர்ந்து விதிமுறை மீறி செயல்பட்டு வருகின்றன.
நேற்று காலை, குமாரபாளையம் மாசுக்கட்டுப்பாட்டுவாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் மணிவண்ணன் தலைமையில் அதிகாரிகள், பள்ளிபாளையம் அடுத்த களியனுார் பகுதியில் செயல்பட்டு வரும் சாய ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், இரண்டு சாய ஆலைகள் விதிமுறை மீறி செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த இரண்டு சாய ஆலைகளுக்கும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.