நாமக்கல்: நாமக்கல் நகரில், ஓட்டல்களில் அனுமதி பெற்று செயல்படும், 'பார்'களில், மதுவிலக்கு போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழகத்தில், மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து, 23 பேர் உயிரிழந்தனர். அதையடுத்து, தஞ்சை மாவட்டத்தில், டாஸ்மாக் பாரில் மது குடித்து, இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம், மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து, தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, நாமக்கல் நகரில், அனுமதி பெற்று ஓட்டல்களில் செயல்படும் அனைத்து பார்களிலும், எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் உத்தரவுப்படி, கூடுதல் எஸ்.பி., ராஜூ தலைமையில், கலால் உதவி ஆணையர் செல்வி, இன்ஸ்பெக்டர் அம்பிகா, எஸ்.ஐ., முருகன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர், நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, 'போதைப்பொருள் தடுப்பு குறித்த விளம்பர தட்டிகள் உள்ளனவா, அரசு விதிமுறைப்படி சரியாக செயல்படுகிறதா, போலி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறதா' என ஆய்வு செய்தனர். மேலும், 'அரசின் விதிமுறைகளை பின்பற்றி பார்களில் மதுபானங்கள் விற்பனை செய்ய வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டனர்.