ஆஞ்சநேயருக்கு
முத்தங்கி அலங்காரம்
நாமக்கல் நகரில், வரலாற்று சிறப்புமிக்க ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, ஒரே கல்லில், 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் சுவாமி, சாந்த சொரூபியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில், முக்கிய விசேஷ நாட்களில், சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடப்பது வழக்கம். வைகாசி, மூன்றாம் சனிக்கிழமையான நேற்று காலை, 8:00 மணிக்கு, ஆஞ்சநேயருக்கு, 1,008 வடைமாலை சாற்றப்பட்டது. தொடர்ந்து, 11:00 மணிக்கு, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சீயக்காய்துாள், 1,008 லிட்டர் பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம் போன்ற பல்வேறு நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து, முத்தங்கி அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.
குடிசையில் தீ
வேலகவுண்டம்பட்டி அருகே, பிராந்தகம், தம்மநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் குமார், 33; விவசாயி. குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று மாலை, வீட்டின் கூரையில் மின் கசிவால் திடீரென தீப்பிடித்து எரிந்தது. நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், குடிசையிலிருந்த பொருட்கள் தீயில் கருகின.
சாலையை கடக்க
முயன்றவர் பலி
குமாரபாளையம் அருகே, சேலம்-கோவை புறவழிச்சாலை, எஸ்.எஸ்.எம்., கல்லுாரி அருகே பெயர் விலாசம் தெரியாத, 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், சாலையை நடந்து கடக்க முயன்றார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று முன்தினம் உயிரிழந்தார். குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வீரமாத்தியம்மன்
கோவில் விழா துவக்கம்
குமாரபாளையம் அருகே, வீரமாத்தியம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டுதலுடன் துவங்கியது.
குமாரபாளையம் அருகே, தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம், வேளாங்காடு பகுதியில் உள்ள வீரமாத்தியம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டுதலுடன் துவங்கியது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் அருள்பாலித்தவாறு வர, காவிரியாற்றிலிருந்து தீர்தக்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அன்னம் படையலிட்டு ஆராதனை நடத்தப்பட்டது.
இதில், பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இக்கோவிலில் ஆடு, கோழி பலியிடுவது இல்லை. பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற மொட்டை அடித்தும், பொங்கல் வைத்தும் வழிபட்டனர்.
முட்டை விலை 5 காசு உயர்வு
தமிழகம், கேரளாவில் முட்டை விலை, 515 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது.
அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். அதையடுத்து, 510 காசுக்கு விற்ற முட்டை விலை, 5 காசு உயர்த்தி, 515 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.
நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) நிலவரம்:
சென்னை, 570, ஐதராபாத், 495, விஜயவாடா, 515, பர்வாலா, 472, மும்பை, 555, மைசூரு, 567, பெங்களூரு, 560, கோல்கட்டா, 540, டில்லி, 491 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டைக்கோழி, கறிக்கோழி விலையில் எந்த மாற்றமும் செய்யாமல், அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
மணல் கடத்திய
லாரி பறிமுதல்
மணல் கடத்தல் லாரியை பறிமுதல் செய்த வருவாய்துறையினர், தப்பியோடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், கந்தம்பாளையம் அருகே, மேலபட்டி-வசந்தபுரம் செல்லும் சாலையில், பரமத்திவேலுார் தாசில்தார் கலைச்செல்வி, வி.ஏ.ஓ., கீதா ஆகியோர், நேற்று முன்தினம் இரவு, வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட முயன்றனர். டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு, அங்கிருந்து காட்டுக்குள் தப்பி ஓடினார். டிப்பர் லாரியை சோதனை செய்தபோது, சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, நல்லுார் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், தலைமறைவான டிப்பர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
குபேரன் ஜூவல்லரி திறப்பு விழா
நாமக்கல் கடைவீதி மெயின்ரோட்டில் அமைந்துள்ள, ஸ்ரீ குபேரன் ஜூவல்லரி திறப்பு விழா, நேற்று முன்தினம் நடந்தது. ஜூவல்லரி ேஷாரூமை, உரிமையாளர் கோபாலன், சிவகுமார், பார்த்திபன் மற்றும் பரமேஸ்வரி ஆகியோர் திறந்து வைத்தனர். சேலம் ஆடிட்டர் கவுதம், வெங்கடேஸ்வரா ஜூவல்லரி சரவணன், பிரபாகரன் ஜூவல்லரி பிரபாகரன், சாய்குமார் ஜூவல்லரி குமரன், ஆனந்தன் ஜூவல்லரி ஆனந்தன், சேலம் பைனான்சியர் கனகராஜ், ஓமலுார் கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டனர். திறப்பு விழாவில கலந்துகொண்ட அனைவரையும், ஸ்ரீ குபேரன் ஜூவல்லரி சார்பில் நன்றி தெரிவித்தனர்.
அரசு மருத்துவமனையில்
ஆய்வு செய்த கலெக்டர்
ராசிபுரத்தில் உள்ள மனநல மறுவாழ்வு மையம் மற்றும் அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
ராசிபுரத்தில் மனநலம் குன்றியவர்களுக்கான, 'அனைக்கும் கரங்கள்' மனநல மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தை, கலெக்டர் உமா ஆய்வு செய்தார். அப்போது, மனநலம் குன்றியவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள், மனநல ஆலோசனைகள், அடிப்படை வசிதிகள், உணவுமுறை குறித்து காப்பாளரிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறை, மருத்துவ வசதி குறித்து கேட்டறிந்தார். மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுகந்தி, தாசில்தார் சுரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.