திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கிரிவலம் முடிந்து ஊர் திரும்ப போதிய பஸ் இயக்கப்படாததால், பக்தர்கள் மறியல் நடத்தினர்.
திருவண்ணாமலையில் வைகாசி பவுர்ணமிக்கு கிரிவலம் சென்ற பக்தர்கள், ஐந்து மணி நேரத்துக்கும் மேல் கோவிலில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
சென்னை திரும்ப பஸ் ஸ்டாண்ட் வந்த பயணியர், 3 மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்தும், பஸ் இல்லை. கட்டுக்கடங்காத கூட்டத்தால், சிறுவர்கள், குழந்தையுடன் வந்தவர்களும், முதியவர்களும் அவதிக்கு ஆளாகினர்.
ஆத்திரமடைந்த பக்தர்கள், திருவண்ணாமலை - சென்னை வழித்தடத்தில், கூடுதல் பஸ்களை இயக்க வலியுறுத்தி, நேற்று காலை, 9:00 மணிக்கு, ரயில்வே மேம்பால சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
வழக்கமாக கிரிவல நாட்களில் இதுபோல் மறியல் நடப்பது பல ஆண்டுகளாக தொடர்கிறது. ஆனால், போக்குவரத்து அதிகாரிகள் தீர்வு காணாமல் மெத்தனம் காட்டுகின்றனர்.