திருப்பூர்;'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், எட்டு ஆண்டுகளில், 15.85 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. 'வனத்துக்குள் திருப்பூர் -9' திட்டம் துவக்க விழா நேற்று நடந்தது. இரண்டு லட்சம் மரக்கன்றுகள் நடும் இலக்குடன், சோளிபாளையம் ஆதர்ஷ் நிட்வேர் நிறுவன உரிமையாளர் ராஜேந்திரனுக்கு சொந்தமான இடத்தில், நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டது.
துவக்க விழாவில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட இயக்குனர் சிவராம், திட்ட பணியை விளக்கி பேசினார். திட்ட இயக்குனர் குமார் வரவேற்றார். தமிழ்நாடு வேளாண்பல்கலைக்கழக பதிவாளர் தமிழ்வேந்தன், மரக்கன்று நட்டு, விழாவை துவக்கி வைத்து, மரம் வளர்ப்பு ஆலோசனைகளை வழங்கினார்.
'வெற்றி' அமைப்பின் நிர்வாகி கோபாலகிருஷ்ணன், நில உரிமையாளர் ராஜேந்திரன், வேளாண் துணை இயக்குனர் சுருளியப்பன் ஆகியோர் மரம் வளர்ப்பு தொடர்பாக பேசினர்.
இயற்கை வேளாண்மைக்கு ஊக்குவிப்பு
பூச்சியியல் வல்லுனர் செல்வம்:
திருப்பூர் என்றாலே, பனியன், ஆடைகள், ஏற்றுமதி என்றுதான் தோன்றும். சுற்றுச்சூழலுக்கு நெருக்கமான நகரம் என்று மாறியுள்ளது. மரம் நடுவது பெரிய விஷயமல்ல, முறையாக வளர்க்க வேண்டும். பல்லுயிர் பெருக்கம் ஏற்படுவது இயற்கையின் விளையாட்டு. பூச்சியில் இரண்டு வகை உள்ளது. பூச்சிக்கொல்லி மருந்து பூச்சியை மட்டும் அழிக்காது; மாறாக, பூச்சியை அழிக்கும் நல்ல பூச்சிகளையும் அழித்துவிடுகிறது. உயிர்கொல்லி விஷமாக உள்ள பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தக்கூடாது. இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க வேண்டும்.
மரம் வளர்ப்பு; தலைமுறை சாதனை
வனக்கல்லுாரி முதல்வர் பாலசுப்பிரமணியன்:
பொருள், பணம் சேர்ப்பது அனைவரும் செய்யலாம்; மரம் வளர்ப்பது, பெருக்குவது என்பது தலைமுறை சாதனை. தமிழகத்தில் முதன்மையானது வேளாண் பல்கலைக்கழகம்; விவசாய பணிகளை மேம்படுத்தி வருகிறது. இத்திட்டம் களப்பணியாளர் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது.
நிர்வாகிகள் சரியான வழிகாட்டுதலை வழங்குகின்றனர். தொழில்நுட்பத்தை புதிதாக வழங்குவதில், புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறைவேற்றி, மரங்களை மதிப்பு கூட்டு மரமாக வளர்க்க திட்டமிட்டுள்ளோம். தொழில்நுட்பத்தை கண்டறிவதில் ஏற்படும் மகிழ்ச்சியைக் காட்டிலும், அதை விவசாயிகள் பயன்படுத்தும்போதுதான், உண்மையான மகிழ்ச்சி கிடைக்கும்.
'வெற்றி' அமைப்பு, வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவினர், வெள்ளகோவில் நிழல்கள், காங்கயம் துளிகள், உடுமலை, 'மலை உடுமலை, திருப்பூர் வேர்கள் அமைப்பினர், பசுமை ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள, அழிவின் விளிம்பில் உள்ள மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. விளாம், கருக்குவாச்சி, மஹாவில்வம், கருங்காலி, தோதகத்தி, தடசு, முந்திரி, எட்டி, படாக், அசோகா, சரக்கொன்றை, பவளமல்லி, கரிபலா, இலையரசு, வேங்கை, குடம்புளி, நறுவுலி, பன்னீர் புஷ்படம், ருத்ராட்சம், பதிமுகம் உள்ளிட்ட அரியவகை மரக்கன்றுகள் நடும் பணி நேற்று துவங்கியுள்ளது.