ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே தி.மு.க.,வினர் கட்சிக்கொடி ஏற்றியதில், இரு கிராமங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு, 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக, 35 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அருகே, லாலாப்பேட்டை மற்றும் முகுந்தராயபுரம் கிராமம் உள்ளது. லாலாப்பேட்டை பஞ்., மறு வரையறை செய்வதில், இரு பஞ்சாயத்துக்களுக்கு இடையே நான்கு மாதங்களாக மோதல், முன் விரோதம் உள்ளது.
இதனால், லாலாப்பேட்டையில் எந்த கட்சி கொடியும் இருக்கக்கூடாது என மக்கள் முடிவெடுத்து, அனைத்து கொடி கம்பங்களையும் அகற்றினர்.
நேற்று முன்தினம் முன்னாள் முதல்வர் கருணாநிதி 100வது பிறந்த நாளையொட்டி, தி.மு.க., கொடியேற்றும் நிகழ்ச்சி அங்கு நடந்தது.
முகுந்தராயபரம் பஞ்., தலைவரும், வாலாஜா மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலருமான முருகன், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதற்கு லாலாப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததில், இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டு, 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களை ஆம்புலன்ஸ்சில் வாலாஜா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அக்ராவரம் கிராமம் அருகே ஆம்புலன்சை வழிமறித்த முகுந்தராயபுரத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களை கீழே இறக்கி மீண்டும் தாக்கினர்.
ராணிப்பேட்டை போலீசார், தகராறில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர்.
பின், காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கூடுதல் எஸ்.பி., விஸ்வேஸ்ரய்யா தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிப்காட் போலீசார், லாலாப்பேட்டையை சேர்ந்த, 18 பேர்; முகுந்தராயபுரத்தைச் சேர்ந்த, 17 பேர் என, 35 பேரை கைது செய்தனர்.